மாற்றுக் கல்வி யோசனையை, டி.டி., கல்லூரி மாணவர்கள் ஏற்க மறுத்ததால், அரசு நடத்திய, ஆறு மணி நேர பேச்சு, தோல்வியில் முடிந்தது. போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், டி.டி., மருத்துவக் கல்லூரி, பல்வேறு சர்ச்சைகளால், கடந்த ஆண்டில் இழுத்து மூடப்பட்டது. இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதியின்றி, இரண்டு ஆண்டுகளில் சேர்க்கப்பட்ட 216 மாணவர்களின் எதிர்காலம், கேள்விக்குறியாகி உள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில், தங்களைச் சேர்த்து, கல்வியைத் தொடர வழிவகை செய்ய வேண்டும் எனக் கோரி, பாதிக்கப்பட்ட மாணவர்கள், பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை கோட்டையில், மாணவ பிரதிநிதிகள் மற்றும் பெற்றோருடன், அரசு பேச்சு நடத்தியது. அமைச்சர் விஜய பாஸ்கர், உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் சாந்தாராமன், மருத்துவக் கல்வி இயக்குனர் கீதாலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பணத்தை மட்டுமல்ல; எதிர்காலத்தையும் நாங்கள் இழந்து தவிக்கிறோம். வேறு வழியில்லாமல் தான் போராடுகிறோம்; அரசுக்கு எதிராக போராடவில்லை. தமிழக அரசுதான், நாங்கள் மருத்துவக் கல்வியைத் தொடர வழிவகை செய்ய வேண்டும் என, மாணவர்கள் வலியுறுத்தினர்.
எம்.சி.ஐ., அனுமதியில் சிக்கல் உள்ளது. சட்ட ரீதியாகவும் பல்வேறு சிக்கல்கள் உள்ளதால், மருத்துவம் பயில சாத்தியமில்லை. வேறு ஏதேனும் படிப்புகளில் நீங்கள் சேரலாம். அரசு, எல்லா உதவிகளையும் செய்யும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இதை மாணவர்கள் ஏற்க மறுத்ததால், காலை 10:30 மணிக்குத் துவங்கி, மாலை 4:30 மணி வரை நடந்த பேச்சு, தோல்வியில் முடிந்தது. இதுகுறித்து, மாணவர்கள் கூறுகையில், "நாங்கள் ஓராண்டுக்கு மேலாக போராடி வருகிறோம். எங்கள் மீது அரசு, எந்த கருணையும் காட்டவில்லை. மருத்துவத்தை விட்டு வேறு படிப்பை தேர்வு செய்யுங்கள் என்கின்றனர். ஏற்க மாட்டோம் என நேரடியாக தெரிவித்து விட்டோம். எதிர்காலம் கருதி போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம்" என்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.