உடுமலை, அமராவதி உண்டு உறைவிடப் பள்ளியின் கட்டமைப்பு, குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
உடுமலை வனச்சரகத்தில் 13 மலைவாழ் கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். மலைவாழ் மக்கள், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதே அரிதான ஒன்று என்ற நிலையில், தளிஞ்சி மலைவாழ் கிராமத்தில் இருந்து 45 குழந்தைகள், அமராவதி உண்டு உறைவிடப்பள்ளியில் படிக்கின்றனர்.
பள்ளியில், போதியளவு ஆசிரியர்கள், குழந்தைகள் தங்குவதற்கு, படிப்பதற்கு என 10 அறைகள், கழிப்பறை, உணவு மைய வசதி, புத்தகங்கள், சீருடை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. ஆனால், பள்ளியின் மேற்கூரை குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.
குழந்தைகள் தங்கும் அறை, வகுப்பறைகள் உள்ளிட்ட அனைத்து அறைகளிலும், சிமென்ட் ஷீட் கூரைகளே அமைக்கப்பட்டுள்ளன. சிமென்ட் ஷீட் மேற்கூரையை பயன்படுத்தினால், உடல் நலன் பாதிக்கப்படும்; புற்று நோய் தாக்கக்கூடிய வாய்ப்புள்ளதால், பல்வேறு நாடுகளில், அவற்றை பயன்படுத்த, 2010ம் ஆண்டில் தடை செய்யப்பட்டுள்ளது.
வெயிலின் வெப்பத்தையும், பனிக்காலத்தில் குளிரையும், அக்கூரைகள் எளிதில் உள்வாங்கிக் கொள்வதால், குழந்தைகளுக்கு அடிக்கடி நோய் ஏற்படுகிறது எனவும், ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர், மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் அளித்துள்ளனர். உடனே, ஆய்வு மட்டுமே மேற்கொள்ளப்பட்டதே தவிர, பள்ளியின் மேற்கூரை மாற்றப்படவில்லை.
மேலும், பள்ளிகளின் கட்டமைப்பு குழந்தைகளுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் அமைந்திருக்க வேண்டும் என்ற விதிமுறை கண்டுகொள்ளப்படாமல் உள்ளது. அப்பகுதியினர் கூறுகையில், "சிமென்ட் ஷீட் மேற்கூரையால் குழந்தைகள் வெயில் காலத்திலும், குளிர்காலத்திலும் பெரிதும் சிரமப்படுகின்றனர். மழை பெய்யும்போது, வகுப்பறைகளில் மழைநீர் விழுவது போன்ற பிரச்னைகள் உள்ளன. இதுதவிர, இரவு நேரங்களில் குளிர் அதிகமாகவும், வெயில் காலத்தில் வெப்பம் கூடுதலாகவும் இருப்பதால், குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, அவர்களின் எதிர்கால வாழ்க்கையே கேள்விக்குறியாகும் அவல நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. மழைவாழ் கிராம குழந்தைகள், கல்வியின் முக்கியத்துவத்தை உணரத் துவங்கியுள்ள நிலையில், அவர்களின் கல்விக்கு தடையாக உள்ள இப்பிரச்னைக்கு மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.