நெல்லை அருகே பள்ளி நிர்வாகத்தினரின் கெடுபிடியால் பத்தாம் வகுப்பு மாணவன் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டான். அவனது பெற்றோர், உறவினர்கள் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருநெல்வேலி, பாளையங்கோட்டையை அடுத்துள்ள கொடிக்குளத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பூதத்தான் மகன் சுடலைமுத்து 15. பாளையங்கோட்டை கிறிஸ்துராஜா மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தான்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊரில் கோயில் திருவிழாவிற்காக விடுமுறை எடுத்துள்ளான். மறுநாள் பள்ளிக்கு சென்றபோது வகுப்பாசிரியரும், தலைமையாசிரியரும் வகுப்பிற்கு செல்ல மறுத்துள்ளனர். பெற்றோரை அழைத்துவருமாறு கூறியுள்ளனர். மாணவனின் சித்தப்பா வந்து பேசிய பிறகும் மாணவனை வகுப்பிற்குள் செல்ல அனுமதிக்கவில்லை. மற்ற மாணவர்கள் முன்னிலையில் அவனை மாடுமேய்க்க அனுப்பவேண்டியதுதானே என சித்தப்பாவிடம் திட்டியுள்ளனர். ஒரு நாள் பகல் முழுவதும் வகுப்பு வாசலில் நின்றபடி இருந்துள்ளான். தம்மால் தமது குடும்பத்தினரும் பாதிக்கப்படுகிறார்களே என மாணவன் வருத்தப்பட்டுள்ளான். பாளையங்கோட்டை மகராஜநகரில் நெல்லை-திருச்செந்தூர் ரயில்வே தண்டவாளம் அருகே உள்ள ஒரு கோயில் அருகே பகல் முழுவதும் உட்கார்ந்திருந்துள்ளான். மாலையில் திருச்செந்தூர் ரயில் அந்த வழியே கடந்தபோது, தண்டவாளத்தில் தலைவைத்து படுத்துவிட்டான். ரயில் அடித்துச் சென்றதில் தலை துண்டானது. பள்ளி மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரித்தனர்.
மாணவன் இறந்த சம்பவம் குறித்த அறிந்த அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று காலை நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பள்ளி ஆசிரியர், தலைமையாசிரியர்கள் கடுமையாக நடந்துகொண்டதால்தான் மாணவன் தற்கொலை செய்துள்ளான். எனவே அவர்கள் மீது தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனுகொடுத்தனர்
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.