Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, August 5, 2014

    மீண்டும் "கொல்ல"ப்பட்ட கும்பகோணத்து குழந்தைகள்... - எல்.முருகராஜ்

    என் பத்திரிகை உலக வாழ்க்கையில் இப்போது அல்ல எப்போதுமே மறக்கமுடியாத துயர சம்பவம்தான் கும்பகோணம் பள்ளி குழந்தைகள் தீயில் கருகி இறந்தது.

    கடந்த 16/7/04 ந்தேதி கும்பகோணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் தீபிடித்ததில் நூற்றுக்கும் அதிகமான குழந்தைகள் இறந்துவிட்டனர் என்பதை கேள்விப்பட்டு அங்கே அதிர்ச்சியுடனும், அழுகையுடனும் ஓடிய பத்திரிகையாளர்களில் நானும் ஒ ருவன்.


    சம்பவம் நடந்த பள்ளிக்கூடம் கும்பகோணம் காசிராமன் தெருவில் இருப்பதும், அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளி மற்றும் இருபாலர் படிக்கும் சரஸ்வதி வித்யாலாயா பள்ளி ஆகிய பள்ளிகள் இயங்கி வந்ததும், இரண்டிலும் சேர்த்து ஆயிரத்திற்கும் அதிகமான பிள்ளைகள் நெருக்கியடித்து படித்துவந்ததும்,போதும் போததற்கு மொட்டைமாடியில் கூரைபோட்டு பிள்ளைகளை படிக்கவைத்ததும் தெரியவந்தது.

    சம்பவத்தன்று மொட்டை மாடியின் கூரைக்கட்டிடத்தில் இயங்கிவந்த சமையல் கூடத்தில் இருந்து கிளம்பி நெருப்பு பள்ளிக்கூரைக்கு தாவ, தீபரவ ஆரம்பித்தது.

    ஆடிவெள்ளி சாமி கும்பிட சிறு பிள்ளைகளை வகுப்பறைக்குள் வைத்து பூட்டிவிட்டு சில ஆசிரியைகள் சென்றதால் குழந்தைகள் அலறியும் கூட வகுப்பறைக்குள் சென்று குழந்தைகளை காப்பாற்ற முடியவில்லை.

    ஆயிரம் குழந்தைகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் என அனைவரும் போய்வர ஒரே ஒரு குறுகலான மாடிப்பாதைதான் வழி. அந்த குறுகலான பாதையில் இறங்கிவர முடியாமல் நின்ற குழந்தைகளை, பெரியவர்கள் ஆளுக்கு இரண்டு பேரைக் கூட தூக்கிவராமல், தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள முண்டியடித்து உயிர்தப்ப ஓடியதில் மிதிபட்டு உயிரை இழந்த குழந்தைகளை நெருப்பு நிறத்தை மட்டுமே மாற்றியது.

    இதனால் இறந்த 94 பேரும் குழந்தைகள், குழந்தைகள் மட்டுமே.

    இதை எல்லாம் காதில் வாங்கியபடி கும்பகோணம் போய்ச்சேர்வதற்குள் எல்லாம் முடிந்திருந்தது.

    இறந்த குழந்தைகளை கரிக்கட்டையாய் பள்ளி வளாகத்தினுள் படுக்கவைத்திருந்தனர், தீக்காயங்களுடன் குற்றுயிராய் மீட்கப்பட்ட குழந்தைகளை பெற்றோர்கள் சிலரே தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரி நோக்கி ஒடினர்.

    ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட குழந்தைகளின், ' அப்பா எரியுதுப்பா,அம்மா தாங்க முடியலேம்மா' என்ற கண்ணீர் குரலை கேட்டவர்கள் பெருங்குரலெடுத்து அழுதனர்.

    கேமிராவை ஓரமாக வைத்துவிட்டு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான மருந்துகளையும், வாழை இலைகளையும் முடிந்தவரை வாங்கிவந்து கொடுத்த போதும், பல குழந்தைகள் கண் எதிரே கொத்து கொத்தாய் செத்து விழுந்தனர்.

    தாங்கமுடியாத வேதனை, சொல்லமுடியாத துயரம் என்றெல்லாம் சொல்வார்களே அதை அன்றுதான் முழுதாய் உணர்ந்தேன்.

    மறுநாள் காலையில் ஒட்டு மொத்த கும்பகோணமே சுடுகாட்டில்தான் கூடியிருந்தது.

    ஆண்கள் அழமாட்டார்கள் என்று சொல்வார்கள் ஆனால் அன்று சுடுகாட்டில் அழாத ஆண்களே இல்லை என்றே சொல்லலாம்.
    பைவ் ஸ்டார் சாக்லெட் என்று பெயர் சொல்லக்கூட தெரியாத ஒரு அப்பாவி தகப்பன், 'இந்த மஞ்சள் கலர் சாக்லெட் வாங்கித்தரலைன்னா.. வரமாட்டேன் போ என்று சொல்லிட்டு போனியேடா, இதோ பை நிறைய வாங்கி வந்துருக்கேன் வாடா ராஜா' என்று தனது ஐந்து வயது மகன் புதைக்கப்பட்ட புதை குழியில் விழுந்து புரண்டு அழுது கொண்டிருந்தார்.

    பெண்களோ அழுது அழுது கண்ணீர் வற்றி காணப்பட்டனர்.'அடுத்த குழந்தையை வளர்க்க வசதி பத்தாது, இந்த ஒரு குழந்தையே போதும்னு நினைச்சு ஆபரேஷன் பண்ணிட்டு உன்னைத்தானடா மலை போல நம்பி வாழ்ந்துட்டு இருந்தோம், இப்ப எங்கள அநாதையா விட்டுட்டு போயிட்டியேடான்னு' சொல்லி கதறி அழுத குரல் உயிரை உருக்கியது.

    தன் காலடியில் இருப்பது தன் பத்து வயது அண்ணனின் எரிந்த மண்டையோடு என்பது தெரியாமல், எட்டு வயது தம்பியானவன் அந்த மண்டையோட்டுக்கு பால் ஊற்றும் போது யாராலும் கண்கொண்டு பார்க்க முடியவில்லை.

    இந்த சோகங்களுக்கு எல்லாம் யார் காரணம் என்று கடந்த பத்து ஆண்டுகளாக தீர விசாரித்து கடந்த வாரம் தீர்ப்பு வந்துள்ளது.
    இந்த தீர்ப்பில் பெற்றோர்களுக்கு சம்மதமில்லை

    பள்ளிக்கான இலக்கணம் கொஞ்சம் கூட இல்லாமல் இயங்கிவந்த பள்ளிக்கு அனுமதி கொடுத்த, அதை பார்வையிட்ட அதிகாரிகள் அல்லவா முதலில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள், அவர்கள் அனைவருமே விடுதலை செய்யப்பட்டது என்ன நியாயம்.அதற்கு போதுமான ஆதராம் இல்லை என்கிறார்களே? எரிந்து கரிக்கட்டையாய் பிள்ளைகள் கிடந்ததற்கு மேல் பெரிய ஆதாரம் என்ன வேண்டும் என்கிறார்கள்.

    பிள்ளைகளை வகுப்பறையில் வைத்து பூட்டியதன் மூலம் குழந்தைகளை கிட்டத்தட்ட கொன்ற ஆசிரியர்களுக்கும் தண்டனை கிடையாது என்றால் அப்புறம் எதற்கு இந்த விசாரணை தீர்ப்பு எல்லாம் என்கிறார்கள்.

    ஒருவருக்கு மட்டும் ஆயுள் தண்டனை மற்ற சிலருக்கு ஐந்து ஆண்டுகள் தண்டனை அதிலும் ஒருவருக்கு அன்று மாலையே ஜாமீன் மற்றவர்கள் அனைவரும் விடுதலை என்கின்ற போது தீ விபத்தில் இறந்து போன அந்த 94 குழந்தைகளை மீண்டும் "கொன்றிருக்கிறார்கள்" என்றே எண்ண வேண்டியுள்ளது.

    விரக்தியின் விளிம்பில் நின்ற பெற்றோர்களின் வார்த்தைகளில் கண்ணீரும்,வேதனையும் ஒட்டி நின்றதை உணரமுடிந்தது.

    நன்றி:தினமலர்.காம்/நிஜக்கதை பகுதி

    1 comment:

    Anonymous said...

    கீழ்மட்ட அதிகாரிகள் பாவம்...
    எறிந்தவன் இருக்க அம்பை நொந்து என்ன பயன்...?
    அப்பள்ளிக்கு அனுமதி அளிக்க நெருக்கிய உயர் அலுவலர் யார்...?
    அரசியல்வாதி யார்...?
    அவர்களுக்கு என்ன தண்டனை...?
    அவர்கள் தப்பிக்கொள்ள கிடைத்த பலியாடுகள்தான் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்கள்...
    பொதுமக்களுக்கு யாரையாவது பழிவாங்கிவிட வேண்டும்....
    ஊருக்கு இளைத்தவன் ஆசிரியன் மட்டுமே....