Pages

Tuesday, August 19, 2014

ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கல்வித்தரம் உயரும்: திண்டுக்கல் மண்டல கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேச்சு

கல்வித்துறையில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் புதுமையான திட்டங்களோடு, ஆசியர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கல்வித்தரம் உயரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார். திண்டுக்கல் மண்டலத்தில் உள்ள மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களின் கல்வி அலுவலர்கள் மற்றும் பொதுத்தேர்வில் 80 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சிப் பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரியில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை வகித்தார்.
பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் சபீதா, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியது:தமிழக அரசு கல்வித்துறைக்கு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து வருகிறது. ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே, இந்த நிதி ஒதுக்கீடு செய்ததன் முழு பலனையும் பெற முடியும். தமிழக மாணவர்கள், கல்வியின் மூலம் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழக முதல்வர் சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். திண்டுக்கல் மண்டலத்தில் உள்ள 5 மாவட்டங்களில், 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத் தேர்வில் 70 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சிப் பெற்ற 234 பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் ஆய்வுக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். பிளஸ்2 தேர்வில், இந்த 5 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 10ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சிப் பெறவில்லை. இவர்களின் எதிர்காலம், தவறான வழியில் செல்வதற்கு வாய்ப்புள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்கும்
வகையில், தரத்தில் பின் தங்கிய மாணவர்களின் மீது கூடுதல் கவனம்
செலுத்தி, அவர்களை சிறப்பாக உருவாக்க வேண்டும். தொடர்ச்சியாக பல
ஆண்டுகள் முதலிடத்தில் இருந்த விருதுநகர் மாவட்டம், பின் தங்கியதற்கான காரணங்களை கண்டறியப்பட வேண்டும். கல்வியில் பின்தங்கிய தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்கள், தேர்ச்சி விகிதத்தில் முன்னேற்றம் பெற்றுள்ளன. தோல்வி நிலையானது இல்லை. இதனை புரிந்து கொண்டு, இழந்த பெருமையை மீட்டெடுக்கும் முயற்சியில் தலைமையாசிரியர்கள் ஈடுபட வேண்டும். 2011ஆம் ஆண்டு, 71ஆயிரம் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்தது. கடந்த 3 ஆண்டுகளில் படிப்படியாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. நிகழாண்டில் மேலும் 3459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார் அவர். 2013-14 கல்வியாண்டில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற 13 மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், 35 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், திண்டுக்கல், தேனி, மதுரை,
விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலிருந்து சிறந்த தொடக்கப்
பள்ளிகளாக தேர்வு பெற்ற தலா 3 பள்ளிகளுக்கும் கேடயங்கள்
வழங்கப்பட்டன. முன்னதாக வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பழனி கல்வி மாவட்ட அளவிலான மாவட்ட சதுரங்கப் போட்டியை அமைச்சர் கே.சி.மணி தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து 356 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி மற்றும் 331 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி ஆகியவற்றையும்வழங்கினார். நிகழ்ச்சியில் மக்களைவை உறுப்பினர் எம்.உதயக்குமார், வேடசந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பழனிச்சாமி, மேயர் வி.மருதராஜ், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன், தொடக்கக் கல்வித்துறை இணை இயக்குநர் லதா, மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர்
பிச்சை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

1 comment:

  1. Congratulation to Our education minister "please sent our brte about 885 as court case by brte association state Secretary rajikumar.dindukal &brtes of yours association villuputam

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.