Pages

Sunday, July 27, 2014

'எனது அரசு' பிரத்யேக இணையதளத்தை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்

மத்திய அரசின் நிர்வாகத்தில் மக்களும் பங்குபெற்று தங்களது கருத்துக்களையும் எண்ணங்களையும் தெரிவிக்க பிரத்தியேக இணையதள சேவையை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்துள்ளார். 'எனது அரசு'(MyGov ) http://mygov.nic.in/ என்ற பிரத்யேக இணையதளத்தை, பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார். அரசின் ஆட்சியில் மக்களுக்கும் பங்குண்டு என்ற நோக்கத்தில், மக்களின் கருத்துக்களையும் பெற்று சிறந்த அரசை நடத்தும் நோக்கத்தோடு இந்த இணையதளம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்று, 60 நாட்கள் நிறைவுபெற்ற தினத்தில், இந்த சேவை துவங்கப்பட்டிருப்பது, இந்த இணையதளத்தின் மற்றொரு சிறப்பாகும்.

"இந்திய மக்கள் பலர், தங்களது நேரம், அறிவு, திறன் அனைத்தையும் அரசின் செயல் திட்டங்களுக்காக வழங்க தயாராக உள்ளனர். மக்கள் நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளனர் என்பதை, கடந்த 60 நாட்கள் ஆட்சி காலத்தில் நான் உணர்ந்துள்ளேன்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், "mygov.nic.in இணையப் பக்கம், அரசின் நிர்வாகத்தில், மக்கள் தங்களது பங்களிப்பினை அளிக்க சிறந்த வழியாக அமையும். இந்த இணையதளம், மக்களுக்கும் அரசுக்கும் உள்ள இடைவெளியை குறைக்கும்.

ஜனநாயகம் என்பது மக்களின் பங்களிப்பில்லாமல் வெற்றியடையாது. மக்களின் பங்கு என்பது தேர்தலில் வாக்களிப்பதோடு முடிந்திவிடாது. அரசின் நடவடிக்கைகளில் மக்களின் பங்கு அவசியமானது" என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.

அரசின் இந்த இணையதள அறிமுக விழாவில் பிரதமர் நரேந்திர மோடியுடன், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், உள்துறை செயலாளர் அஜித் சிங் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இந்த இணையதளத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப ரீதியிலான விஷயங்களை, தேசிய தகவல் மையம் நிர்வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே, மக்களின் கருத்துக்களை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தின் மூலம், அரசின் முக்கிய திட்டங்களுக்கு மக்களிடம் அந்த துறை ரீதியாக, கருத்துக்களை சேகரிக்கவும், திட்டங்கள் மீதான ஆலோசணை, எண்ணங்கள் மற்றும் கருத்துக்களை பெற்று அதன் மீது விவாதங்களை மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, 'ஆலோசனை', 'செயல்' என இரண்டு பிரிவுகள் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. முதற்கட்டமாக, பெண் கல்வி, கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டம், டிஜிட்டல் இந்தியா, வேலை உருவாக்கம் என அரசின் சில திட்டங்கள் இணையதளத்தில் மக்களின் கருத்து பெறுவதற்காக சேர்க்கப்பட்டுள்ளன

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.