Pages

Sunday, July 13, 2014

நீதித்துறை சுதந்திரத்தின் தோல்வி!

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது என்பது நீதித்துறை விஷயத்திலும் நிரூபிக்கப்பட்டுவிட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கு நான்கு பெயர்களை உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்து. அதில் கோபால் சுப்பிரமணியத்தின் பெயரை தன்னிச்சையாக நீக்கி, மற்ற மூன்று பெயர்களைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது மத்திய அரசு.

இந்திய அரசமைப்பு சட்டத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்படத் தகுதி வாய்ந்தவர் எவர் என ஷரத்து 124(3)-ல் கூறப்பட்டுள்ளது. அதன்படி ஐந்து வருடங்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவி வகித்தவர்களும், உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக 10 ஆண்டுகள் பணியாற்றியவர்களும், குடியரசுத் தலைவரின் கருத்தில் ஒரு நீதிவல்லுநர் எனப்படுபவரும் அந்தப் பதவிக்குப் பரிந்துரைக்கப்படலாம். ஆனால், கடந்த 64 ஆண்டுகளில் நான்கு முறை மட்டுமே உயர் நீதிமன்ற நீதிபதிகள் தவிர மற்ற பிரிவினரில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதற்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவே இல்லை.
உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு கோபால் சுப்பிரமணியம், ரோஹின்டன் நாரிமன் என்ற இரு மூத்த வழக்கறிஞர்களின் பெயர்களை, இப்போது தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுள்ள ஆர்.எம்.லோதா, உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் ஒப்புதலுடன் பரிந்துரைத்தார். பல வருடங்களுக்குப் பிறகு முதன்முறையாக வழக்கறிஞர்கள் பிரிவில் இருந்து உச்ச நீதிமன்ற பதவிக்கு இரண்டு பெயர்களை தலைமை நீதிபதி பரிந்துரைத்ததை நாடே வியப்புடன் பார்த்தது.
1993-ம் வருட நியமன நடைமுறைப்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள் நியமனத்துக்குத் தகுந்த பெயர்களை தேர்ந்தெடுத்து, ஐந்து மூத்த நீதிபதிகளின் (கொலிஜியம்) கருத்துக்களைப் பதிவுசெய்து, பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். மத்திய அரசு அந்தப் பெயர்களை பரிசீலனை செய்து தனது பரிந்துரையுடன் குடியரசுத் தலைவரின் ஆணைக்கு அனுப்பலாம். ஏதேனும் ஒருவருடைய தகுதி பற்றி அரசுக்கு வேறு கருத்து இருந்தாலோ (அ) அந்த நபரைப் பற்றிய உளவுத்துறையின் குறிப்புகளையும் உச்ச நீதிமன்றத்துடன் பகிர்ந்துகொள்ளலாம். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, அவருக்குக் கீழேயுள்ள நான்கு மூத்த நீதிபதிகளின் கருத்தை அறிந்து அதற்குப் பின்னும் உச்ச நீதிமன்ற கொலிஜியம் மறுபடியும் பரிந்துரைத்தால், அந்தப் பெயரைக் கட்டாயமாக மத்திய அரசு குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைக்க வேண்டும். அப்படி ஒரு நபர் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுவிட்டால், அவரைப் பதவியில் இருந்து நீக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பங்கு வாக்களிப்பு தேவை.
கடந்த 20 ஆண்டுகளில் உச்ச நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமனத்தில் அநேகமாக எவ்வித பங்கையும் அரசுக்கு வழங்காமல் நியமனங்கள் நடைபெற்றது பற்றி பலத்த விமர்சனங்கள் எழுந்தன. ஓய்வுபெற்ற நீதிபதிகள் பலரும் கட்டுரைகள் மற்றும் சுயசரிதைகள் வாயிலாக, கொலிஜியம் நியமன நடைமுறையைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரூமா பால் தனது கட்டுரை ஒன்றில் கொலிஜிய நியமன நடைமுறையில் ஒளிவு மறைவற்ற தன்மை இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்போது மத்திய அரசின் சட்ட ஆணையத் தலைவராகவுள்ள நீதிபதி ஏ.பி.ஷா, சென்னை மற்றும் டெல்லி உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதியாக இருந்து திறமையாகப் பணியாற்றியும், அகில இந்திய உயர் நீதிமன்ற நீதிபதிகளின் முதுநிலைப் பட்டியலில் முதலில் இருந்தும்கூட, உச்ச நீதிமன்ற கொலிஜியம் அவரது பெயரை பரிந்துரைக்க மறுத்துவிட்டது. அதே சமயத்தில் கொலிஜியத்தின் பரிசீலனையில் இருந்த மற்றொருவரான நீதிபதி ஏ.கே.பட்நாயக்கின் பெயரும் பரிந்துரைக்கப்படவில்லை. ஆனால், சில மாதங்களுக்குப் பின்னர் கொலிஜியத்தில் இருந்த நீதிபதிகள் மாற்றத்தினால் நீதிபதி ஏ.கே.பட்நாயக்கின் பெயர் மறுபடியும் பரிந்துரைக்கப்பட்டு அவர் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஆக்கப்பட்டார். இதைப்பற்றி கடுமையான விமர்சனத்தை இந்தியாவின் தலைசிறந்த சட்ட நிபுணர் பாலி நாரிமன் தனது புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
இப்படி 1993-ம் வருட உச்ச நீதிமன்றம் ஏற்படுத்திய நீதிபதி நியமனங்களின் நடைமுறை, கடுமையான எதிர்ப்புகளை சந்தித்து வருவதை எதிர்கொள்ளும் விதமாக, அரசமைப்பு சட்டத்தைத் திருத்தி நீதிபதி நியமன ஆணையத்தை உருவாக்க நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றினர். அதன்படி நீதிபதிகளே நீதிபதிகளை நியமனம் செய்துகொள்ளும் நடைமுறையை மாற்ற முயற்சித்தனர். அதற்கு வழக்கறிஞர் அமைப்புகளில் இருந்து கடுமையான கண்டனங்கள் எழுந்ததாலும், அன்றைய எதிர்க்கட்சியான பி.ஜே.பி சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாக, மறைமுகமான ஆதரவளித்தனர்.
இன்று உச்ச / உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தின் 20 ஆண்டுகள் நடைமுறை இன்றைக்கு பலதரப்பினர்களுடைய அதிருப்திகளைத்தான் சம்பாதித்துள்ளது. இதற்கு மாற்று என்ன? அமெரிக்காவில் உள்ள நடைமுறை மாற்றாகுமா?
நீதிபதியாக நியமிக்கப்படுபவர்களின் தகுதியைப் பரிசீலிக்க வேண்டும். அமெரிக்காவில் நீதிபதியாக யார் நியமிக்கப்படுகிறார்களோ அவர்களை செனட் துணைக் குழு உறுப்பினர்கள் முதலில் விசாரிப்பார்கள். தொலைக்காட்சியில் மூன்று, நான்கு நாட்கள் அவர்களைப் பற்றி அக்குவேறு ஆணிவேறாக அலசுவார்கள். அவர்களது அரசியல், பொருளாதார, சமுதாய அறிவை சோதிப்பார்கள். அதே நேரம் பத்திரிகைகள் அவர்களின் குடும்பத்தினர், பள்ளி வட்டாரத்தினர், பழகிய நண்பர்/ நண்பிகளிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்பார்கள். இவ்வாறு உள்ளேயும் வெளியேயும் விசாரணை நடந்தபின் செனட்டில் மெஜாரிட்டி உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற ஒருவர்தான் நீதிபதியாக நியமிக்கப்படுவார்கள். 
நம் நாட்டிலோ நீதிபதிகளைப் பற்றிய முழு விவரத்தையும் விசாரிப்பது இல்லை. திரைமறைவிலேயே நியமனம் நடைபெறுகிறது. பத்திரிகைகள்கூட யூகமாகத்தான் அதைப்பற்றி எழுதுகின்றன. உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் உஸ்மானிய பல்கலைக்கழகத்தில் படித்தபோது பொதுச்சொத்தை சேதப்படுத்தியதற்கான பிடிவாரன்ட், அவர் நீதிபதியான பின்னரும் இருப்பில் இருந்தது.
கோபால் சுப்பிரமணியத்தின் நியமன விவகாரத்தில் மூன்று விதமான கருத்துக்கள் வெளியே வந்துள்ளன. அவரது பெயரை பட்டியலில் இருந்து தவிர்த்து மற்ற பெயர்களை குடியரசுத் தலைவரது ஆணை வேண்டி மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட முடியுமா என்பது ஒன்று. தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, தான் ரஷ்ய நாட்டில் பயணத்தில் இருந்தபோது தன்னை கலந்தாலோசிக்காமலேயே பட்டியலில் இருந்து பெயரை மத்திய அரசு தவிர்த்தது தவறு என்று குறிப்பிட்டிருப்பது ஒன்று. அதே சமயத்தில் கோபால் சுப்பிரமணியம் அவசரப்பட்டு தனது பெயரை திரும்பப் பெற்றுக்கொண்டுவிட்டதால் இந்த விஷயத்தில் வேறெதுவும் செய்ய முடியவில்லை என்று தனது பங்கை முடித்துக்கொண்டது சோக வரலாறு. ஓய்வுபெற்ற நீதிபதிகள் வி.ஆர்.கிருஷ்ணய்யரும், எம்.என்.வெங்கடாசலய்யாவும் தனது விஷயத்தில் ஆதரவு தெரிவித்ததை நினைத்து கோபால் சுப்பிரமணியம் திருப்தியடைந்து விட்டதால் 'ஆளை விடுங்க சாமி’ என்று ஒதுங்கிக் கொண்டார். இதனால் இவ்விஷயத்தில் முழு உண்மை இனி வெளிவராது.
ஆக மொத்தம் பி.ஜே.பி தலைவர் அமித் ஷாவுக்கு எதிராக வழக்காடிய கோபால் சுப்பிரமணியம் நீதிபதியாக முடியாததால் மோடி அரசுக்குத்தான் வெற்றி. தலைமை நீதிபதி லோதா தன் பங்குக்கு ஆதங்கத்தை தெரிவித்துவிட்டு ஒதுங்கிக்கொண்டதும், கோபால் சுப்பிரமணியம் தன் பெயருக்கு மேலும் களங்கமேற்படாமல் கரையேறியதும் நீதித்துறையின் சுதந்திரத்துக்குக் கிடைத்த தோல்வி.

1 comment:

  1. பள்ளிகளின் நலன் ஆசிரியா்களின் நலன் என்ற வரையறைக்குள் நாம் செயல்படுவது நன்று. நமது எல்லையைத்தாண்டி நாம் செல்ல வேண்டியது அநாவசியம். நீதிபதிகளின் சொந்த வாழ்க்கை மற்றும் குறைபாடுகள் குறித்தும் ஏராளமாக செய்திகள் பத்திரிகைகளில் குவிந்து கிடக்கின்றதே. அதற்கெல்லாம் நாம் தீர்வு காண முடியுமா ? அதுபோல்தான் ஐயா கோபால் சுப்பிரமணியம் அவர்களின் நியமனமும்.100 விழுக்காடு நல்லவர்களாக நாம் இல்லை என்பதுதான் முடிவு.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.