Pages

Thursday, July 31, 2014

பள்ளிக் கல்வித்துறை தொடர்பான பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார் முதல்வர்!

நடப்பாண்டில் 300 துவக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் ஆகியவை, உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

சட்டசபையில், 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்: 25 மாவட்டங்களில், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினரின் 128 குடியிருப்புப் பகுதிகளில், 128 துவக்கப் பள்ளிகள் துவக்கப்படும். ஒவ்வொரு பள்ளிக்கும், ஒரு தலைமை ஆசிரியர், ஒரு இடைநிலை ஆசிரியர் நியமிக்கப்படுவர். பள்ளிக்கு, சத்துணவு சமையலறை, குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்யப்படும். இதற்காக, ஆண்டுக்கு 19.43 கோடி ரூபாய் செலவாகும்.


19 மாவட்டங்களில் உள்ள 42 துவக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இவற்றுக்கு தலா மூன்று பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்படுவர். ஒவ்வொரு பள்ளிக்கும், மூன்று கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரப்படும். இதற்கு ஆண்டுக்கு 9.28 கோடி ரூபாய் செலவாகும்.

நடப்பு கல்வியாண்டில், 50 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இவற்றுக்கு, தலா ஒரு தலைமை ஆசிரியர், ஐந்து பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். இதன்மூலம், 1.20 கோடி ரூபாய் ஆண்டுக்கு செலவு ஏற்படும்.

மேல்நிலைப் பள்ளிகளாக, தரம் உயர்த்தப்பட்ட, மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளில், தமிழ், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல் பாடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.

நடப்பாண்டில், 100 மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இப்பள்ளிகளுக்கு 100 தலைமையாசிரியர்கள், 900 முதுநிலை ஆசிரியர்கள் பணியிடம் உருவாக்கப்படும். இதற்காக, ஆண்டுக்கு, 31.82 கோடி செலவாகும்.

விபத்தில் பெற்றோர் இறந்துவிட்டாலோ, நிரந்தர முடக்கம் ஏற்பட்டாலோ, அவர்களின் குழந்தைகளை, பிளஸ் 2 வரை படிக்க வைக்க, அரசு டிபாசிட் செய்யும் 50 ஆயிரம் ரூபாய், 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். 2,057 பள்ளிகளின் கழிப்பறைகளை பராமரிக்க, 160.77 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

1 முதல் 7ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கையெழுத்து பயிற்சி ஏடுகள்; 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஓவியப் பயிற்சி ஏடுகள்; 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, அறிவியல் செய்முறை பயிற்சி ஏடுகள் இலவசமாக வழங்கப்படும்.

நீலகிரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், ஐந்து உண்டு உறைவிட பள்ளிகள் அமைக்கப்படும். இவற்றுக்கு, ஐந்து முழுநேர ஆசிரியர்களும், மூன்று பகுதி நேர ஆசிரியர்களும் நியமிக்கப்படுவர்.

துவக்க கல்வித் துறையின் கீழ் இயங்கும், துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு, 72.90 கோடி ரூபாயில், 1,175 கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, நாட்காட்டியுடன் கூடிய குறிப்பேடு வழங்கப்படும். இவ்வாறு ஜெயலலிதா அறிவித்தார்.

1 comment:

  1. 2+1 pattadharigal ulla nadunilaippalligalil 3+1 pattadharigal niyamikka vendum

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.