கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், காவல் துறையில் சேர்ந்த, 8,000 காவலர்கள், தங்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும்' என, முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில், 2003 டிசம்பர் முதல் தேதி, காவல் துறையில், 8,000 பேர் காவலர்களாக பணியில் சேர்ந்தோம். நாங்கள், இப்பணியில் சேர, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், விண்ணப்பித்தோம்.
பல்வேறு காரணங்களாக, பணியில் சேர காலதாமதம் ஏற்பட்டது. இப்பணிக்கு விண்ணப்பித்தபோது, 'வருங்கால வைப்பு நிதி திட்டம் கிடையாது' என, அறிவிப்பு எதுவும் வெளியாக வில்லை. எங்களுக்கு பின், விண்ணப்பித்து, 2003 மார்ச் 3ம் தேதி, பணியில் சேர்ந்த பெண் காவலர்கள், வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இணைந்தனர்.
ஆனால், 8,000 காவலர்களுக்கு, புதிய பென்ஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கே, புதிய பென்ஷன் திட்டம், 2004 ஜனவரி முதல் தேதியில் இருந்து தான் அமல்படுத்தப்பட்டது. ஆனால், தமிழக அரசு, 2003ல் பணியில் சேர்ந்த, எங்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தியது.
வருங்கால வைப்பு நிதி உள்ளவர்கள், தங்கள் குழந்தைகளுக்கான கல்விச் செலவு போன்றவற்றுக்கு, வைப்பு நிதியிலிருந்து கடன் பெற்றுக் கொள்கின்றனர். ஆனால், புதிய பென்ஷன் திட்டத்தில், அவ்வாறு கடன் பெற இயலவில்லை. அரசு மற்றும் தனியார் வங்கியில், போலீசாருக்கு கடன் தர மறுக்கின்றனர். எனவே, குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறுகிறோம்.அதேபோல், புதிய பென்ஷன் திட்டத்திற்காக, மாத சம்பளத்தில், குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. அந்தத் தொகை, கணக்கு பட்டியலில் சேர்க்கப்படுகிறதா என்ற தகவலும், போலீசாருக்கு முறையாக தெரிவிக்கப் படுவதில்லை.
இதுகுறித்து, அதிகாரிகளை கேட்டாலும், முறையான தகவல் இல்லை.
இப்பிரச்னைகளை தவிர்க்க, காவல் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் முதல்வர், 8,000 போலீசாருக்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.