Pages

Thursday, July 24, 2014

மருத்துவக் கல்வியின் நிலை வருத்தப்பட வைக்கிறது: உயர் நீதிமன்றம் வேதனை

டாக்டர் ஒரு இடத்தில் பணிபுரிந்துவிட்டு மற்றொரு இடத்தில் பெயரளவில் வருகையை பதிவு செய்வது அல்லது பணியில் உள்ளதுபோல் பெயரை பதிவு செய்கின்றனர். சி.பி.ஐ. அறிக்கையை பார்க்கையில் மருத்துவக் கல்வியின் இன்றைய சூழ்நிலை பற்றி வருத்தப்பட வைக்கிறது என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.


மதுரை டாக்டர் சுந்தரராஜன் கர்நாடகாவிலும், பின் புதுச்சேரியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியிலும் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்தார். பின் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார். மருத்துவக் கல்லூரியில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அங்கு சுந்தரராஜன் பேராசிரியராக பணிபுரியாமலேயே பணிபுரிவதுபோல் (நேம் லெண்டர்) பெயரளவில் ஆவணம் இருந்ததாகவும், இது மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிரான செயல் எனவும் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு (எம்.சி.ஐ.,) அறிக்கை தாக்கல் செய்தது.

உங்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது? என சுந்தரராஜனுக்கு எம்.சி.ஐ. நோட்டீஸ் அனுப்பியது. ஆஜராகுமாறு எம்.சி.ஐ.யின் நெறிமுறைக்குழுவும் உத்தரவிட்டது. இதை ரத்து செய்யக்கோரி சுந்தரராஜன் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

நீதிபதி கே.கே.சசிதரன் உத்தரவு: இவ்வழக்கைப் பொறுத்தவரை மனுதாரர் மீது எம்.சி.ஐ. மற்றும் மருத்துவ நெறிமுறைக்குழு நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளதா? இல்லையா? என்பதுதான் கேள்வி. மனுதாரர் மருத்துவக் கல்லூரியில் பணிபுரியவில்லை. ஆனால் பணிபுரிவதுபோன்ற தோற்றத்தை உருவாக்க மனுதாரர் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சி.பி.ஐ. தெரிவித்து உள்ளது.

இதுபோல் வேறு எங்கோ பணிபுரியும் 29 பேரின் பெயர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கல்லூரியின் வருகைப் பதிவேட்டில் மனுதாரரின் பெயர் இல்லை. வங்கி மூலம் சம்பளம் வழங்கவில்லை. ஆனால் பணிபுரியாமலேயே நேம் லெண்டராக மனுதாரரின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எம்.சி.ஐ. சட்ட ரீதியான அமைப்பு. மருத்துவக் கல்லூரியின் தரத்தை மேம்படுத்தி, பாதுகாக்கும் பொறுப்பு அதற்கு உண்டு. மருத்துவ பேராசிரியர்களின் தொழில் ரீதியான நன்னடத்தையை கண்காணிக்கும் கடமையும் எம்.சி.ஐ.க்கு உள்ளது. டாக்டர் ஒரு இடத்தில் பணிபுரிந்துவிட்டு, மற்றொரு இடத்தில் பெயரளவில் வருகையை பதிவு செய்வது அல்லது பணியில் உள்ளதுபோல் பெயரை பதிவு செய்கின்றனர்.

சி.பி.ஐ. அறிக்கையை பார்க்கையில் மருத்துவக் கல்வியின் இன்றைய சூழ்நிலை பற்றி வருத்தப்பட வைக்கிறது. மருத்துவக் கல்லூரியில் ஆசிரியரே இல்லாத சூழ்நிலையில் செய்முறைத் தேர்வு, கற்பித்தல் பணி எப்படி நடக்கும்? இப்படி இருந்தால் அரைவேக்காட்டுத்தனமான டாக்டர்கள்தான் உருவாவர்.

இந்தியாவில் காளான்கள் போல் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் பெருகிவருகின்றன. முறையான பயிற்சி இல்லாதபோது சரியான டாக்டர்கள் உருவாக முடியாது. இதனால் சமுதாயம் பாதிக்கும். மருத்துவக் கல்லூரிகளின் தரம் குறைவதற்கு காரணமானவர்கள் மீதும், நன்னெறிகளுக்கு புறம்பாக செயல்படுவோர் மீதும் எம்.சி.ஐ. கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.