டெல்லி மாநகர போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்தவர் ரன்வீர்சிங். இவர் 1973–ம் ஆண்டு மாயாபுரி வழித்தடத்தில் செல்லும் பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்தார். அப்போது வழியில் அந்த பஸ்சில் டிக்கெட் பரிசோதகர்கள் ஏறி பயணிகளிடம் இருந்த டிக்கெட்டுகளை வாங்கி பரிசோதித்தனர். அப்போது மாயாபுரி செல்லும் ஒரு பெண் பயணிக்கு 15 பைசா டிக்கெட்டுக்கு பதில் 10 பைசா டிக்கெட் கொடுத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கண்டக்டர் ரன்வீர்சிங் மீது இலாகாபூர்வ விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர் தவறு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவரை கண்டக்டர் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து டெல்லி போக்குவரத்து கழகம் 1976–ம் ஆண்டு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தொழிலாளர் கோர்ட்டில் கண்டக்டர் முறையீடு செய்தார். மனுவை விசாரித்த தொழிலாளர் கோர்ட்டு கண்டக்டரை டிஸ்மிஸ் செய்தது செல்லாது, அவருக்கு வழக்கு நடந்த காலத்துக்கான முழு சம்பளத்துடன் மீண்டும் பணி நியமனம் வழங்க வேண்டும், கண்டக்ரை டெல்லி போக்குவரத்து கழகம் டிஸ்மிஸ் செய்தது குற்றம் என்று கடந்த 1990–ம் ஆண்டு தீர்ப்பு கூறியது.
இதை எதிர்த்து போக்குவரத்து கழகம் டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல் செய்தது. இதில் கண்டக்டர் அரசை ஏமாற்றி இழப்பு ஏற்படுத்தி இருக்கிறார். அவர் மீது கருணை காட்டக் கூடாது என்று மனுவில் கூறியது.
ஆனால் ஐகோர்ட்டு அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அப்பீல் மனுவை தள்ளுபடி செய்து 2008–ல் உத்தரவிட்டது. அப்போது ரன்வீர்சிங் பணிக்காலம் முடிந்து ஓய்வு பெற்றதால் அவருக்கு முழு ஓய்வூதியப் பணப்பலன் வழங்கவும் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதையும் ஏற்றுக் கொள்ளாத போக்குவரத்து கழகம் நீதிபதி ஹீமாகோக்லி முன் ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. ஒரு அரசு ஊழியர் அரசை ஏமாற்றியதை அனுமதிக்க கூடாது என்றும் இதை அனுமதித்தால் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வதை ஊக்குவிப்பதாக அமைந்து விடும் என்று போக்குவரத்து கழகம் சார்பில் தொடர்ந்து வாதாடப்பட்டு வருகிறது.
டெல்லி போக்குவரத்து கழகத்தின் பிடிவாதத்தால் வழக்கு விசாரணை நீண்டு கொண்டே போகிறது. இந்த நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை வருகிற ஆகஸ்டு மாதம் 12–ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
1973–ல் தொடங்கிய வழக்கு விசாரணை 41 ஆண்டுகளாக நடைபெறுகிறது. கண்டக்டர் ரன்வீர் சிங்குக்கு தற்போது 70 வயதாகிறது. சம்பளமும் இல்லை. ஓய்வூதிய பலனும் இல்லை.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.