Pages

Friday, June 27, 2014

மேல்நிலைப் பள்ளியாக உயரும் தரம் இருந்தும் அதிகாரிகள் அலட்சியம்

முகலிவாக்கம் அரசு உயர்நிலை பள்ளியை, மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தும் அளவிற்கு வசதிகள் இருந்தும், கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என, மாணவ, மாணவியரின் பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர்.


முகலிவாக்கம், அரசு உயர்நிலை பள்ளி வளாகம், ஒன்றரை ஏக்கர் பரப்பளவு கொண்டது. தற்போது, 6 முதல் 10ம் வகுப்பு வரை, 162 மாணவர்கள் உட்பட, 325 பேர் படிக்கின்றனர். முகலிவாக்கம், மணப்பாக்கம், மகனந்தபுரம், குன்றத்துார் ஆகிய பகுதியில் இருந்தும் மாணவ, மாணவியர் வருகின்றனர்.

நடவடிக்கை இல்லை

முன்பு, ஐந்து வகுப்பறைகள் இருந்தன. 10ம் வகுப்பு முடித்த மாணவர்கள், பிளஸ் 1 படிப்பை தொடர, முகலிவாக்கம் பள்ளி யில் இருந்து, 3 முதல் 5 கி.மீ., தொலைவில் உள்ள போரூர், பரங்கிமலை, பாய்கடை ஆகிய பகுதியில் செயல்படும் அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு செல்ல வேண்டி உள்ளது. அதனால், உயர்நிலை பள்ளியை, மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த, முகலிவாக்கம் பகுதிவாசிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில், ஒரு கோடி ரூபாய் செலவில், 12 வகுப்பறை, ஒரு பரிசோதனை கூடம் கொண்ட மூன்றடுக்கு புதிய கட்டடம், கடந்த ஆண்டு திறக்கப்பட்டது.தற்போது, மேல்நிலை பள்ளிக்குரிய அனைத்து வசதிகளும் அந்த பள்ளியில் உள்ளன. ஆனால், பள்ளியை தரம் உயர்த்த, பள்ளி கல்வித்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும், பிளஸ் 1ல் சேர்க்க, அதிக துாரம் செல்ல வேண்டி உள்ளதால், சில பெற்றோர் பெண் பிள்ளைகளை பாதுகாப்பு கருதி, 10ம் வகுப்போடு படிப்பை நிறுத்தி, பணிக்கு அனுப்புகிற அவல நிலை ஏற்பட்டுள்ளது.

அச்சத்தில் பெற்றோர்

இதுகுறித்து, முகலிவாக்கம், மணப்பாக்கம், மகனதபுரம் பகுதி மாணவ, மாணவியரின் பெற்றோர் கூறியதாவது: மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த, 10 ஆண்டுகளாக கோரிக்கை வைக்கிறோம். முகலிவாக்கம் பள்ளிக்கே, 5 கி.மீ., துாரம் வரை அனுப்ப வேண்டி உள்ளது.
பிளஸ் 1 செல்ல மேலும், 5 கி.மீ., துாரம் அனுப்ப வேண்டும். பள்ளியில் இருந்து வீடு திரும்ப இரவு ஆகிவிடுவதால், பெண் பிள்ளைகளை அவ்வளவு துாரம் அனுப்ப அச்சமாக உள்ளது. உயர் அதிகாரிகள் கவனம் செலுத்தி, முகலிவாக்கம் பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட கல்விதுறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த கோரிக்கை வந்தது. இதை, உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம்" என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.