"தமிழ்மொழி அழிந்தால், தமிழ் இனம் அழிந்து விடும்' என பழ.கருப்பையா பேசினார். சென்னை பல்கலை நூற்றாண்டு மண்டபத்தில் தினமணி நாளிதழ் சார்பில் இரண்டாம் நாள் இலக்கியத் திருவிழா நடந்தது. இதில், சமயமும் தமிழும் என்ற தலைப்பில் நடந்த அமர்விற்கு சுதா சேஷய்யன் தலைமை வகித்தார்.
இனத்தின் அடையாளம்
அப்போது என்னை செதுக்கிய இலக்கியம் என்ற தலைப்பில் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா பேசியதாவது:
தமிழ்மொழி தனித்து நிற்கிறது. அது தான், தமிழின் வளர்ச்சிக்கு காரணம். தமிழகத்தில் பக்தி இலக்கியங்களால் மிகப் பெரிய தாக்கம் ஏற்பட்டது. பிரிந்து இருந்த சமுதாயங்களை ஒன்றிணைத்தது பக்தி இலக்கியங்களே.
தமிழ் சமுதாயத்தை ஒருங்கிணைத்ததில் ஞானசம்பந்தர், உ.வே. சாமிநாத அய்யர், பரிதிமாற்கலைஞரின் பங்கு முக்கியம்; மற்றவர்கள் வேதாந்தத்தை தோற்றுவித்த காலத்தில் ராமலிங்க அடிகளார் தமிழின் தனித்தன்மையை பாதுகாக்க போராடினார்.
மொழி என்பது ஒலி வடிவம் அல்ல. அது ஒரு இனத்தின் முகம், இனத்தின் அடையாளம். தமிழின் உயிர்ப்பு எழுத்தில் இல்லை. தமிழ் வரி வடிவங்களுக்கு பலர் மாற்றம் தந்துள்ளனர். எத்தனை முறை வரி வடிவத்தை மாற்றினாலும், தமிழின் சிறப்பு மங்கவில்லை. தமிழின் உயிர்ப்பு ஒலி வடிவங்களில் தான் உள்ளது. அயல் மொழியின் ஒலியை உள்வாங்கினால், தமிழ் மொழியின் ஒலி அழிந்து, தமிழ்மொழி வளர்ச்சி பாதிக்கப்படும். தமிழ்மொழி அழிந்தால், தமிழ் இனம் அழிந்து விடும். இவ்வாறு, பழ.கருப்பையா பேசினார்.
வாசிப்பும், பழக்கம் என்ற அமர்விற்கு, ராஜேந்திரன் தலைமை வகித்தார். அதில் தொல். திருமாவளவன் பேசியதாவது:
மனித நேயத்தை நிலை நாட்டும் ஆற்றல் இலக்கியத்திற்கு உள்ளது. எல்லாம் மாறிக் கொண்டிருக்கும்; என்பது மட்டும் மாறாது என்ற வரிகள் என்னை செதுக்கியது. இந்தியை திணிக்கும் முடிவிலும் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
மிகவும் கவர்ந்தது
அடுத்த அமர்வில் என்னை கவர்ந்த காப்பியம் சிலப்பதிகாரமே என்ற தலைப்பில், ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ பேசியதாவது:
தமிழில் வெளியான ஏராளமான நூல்களில் சிலப்பதிகாரம் தான் என்னை மிகவும் கவர்ந்தது. உலகில் எந்த ஒரு மொழியிலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், தன் மண்ணில் வாழும் சாதாரண குடிமக்களை பற்றி யாரும் காப்பியங்கள் படைக்கவில்லை.
எல்லோரும் சட்டத்தின் முன் சமம் என்று, சில நூறு ஆண்டுகளுக்கு முன், பிற நாடுகள் சட்டத்தை இயற்றி இருக்கலாம். ஆனால், சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த நீதியை கொண்டு வந்தது தமிழ் சமுதாயம். சிலப்பதிகாரத்தில் சில தவறுகள் இருக்கலாம். ஆனால், சமுதாயத்திற்கு எது தேவையோ, எது நன்மை தருமோ அதை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். சிலப்பதிகாரத்தில் வஞ்சி காண்டத்தில் உள்ளது போல், மான உணர்ச்சிமிக்க இளைஞர்கள் தமிழகத்தில் உருவாக வேண்டும். உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் பெண்கள் உருவாக வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
விழாவில் வேர்களைத் தேடி கலைகள் என்ற தலைப்பில் தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் நாகசாமி பேசும்போது, இயல், இசை, நாடகம் மூன்றையும் அறிந்தோரே, தமிழை முழுமையாக அறிந்தவர்கள் என சிலப்பதிகாரம் கூறுகிறது. பண்டைய மரபுப்படி இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றையும் படிக்கும் சான்றோர் உருவாக வேண்டும், என்றார்.
நிறைவு விழாவில் கவர்னர் ரோசய்யா, நீதிபதி ராமசுப்ரமணியம், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமங்களின் தலைவர் மனோஜ்குமார் சொந்தாலியா, தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், சென்னை பல்கலை துணைவேந்தர் தாண்டவன் ஆகியோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.