Pages

Saturday, June 28, 2014

கடைகளில் விற்பனைக்கு வந்த அரசின் இலவச பாட புத்தகங்கள்!!!

குன்னூரில் புத்தக விற்பனை கடைகளில் நடந்த திடீர் சோதனையில், அரசின் விலையில்லா புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன. நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள, சில பாட புத்தக கடைகளில், விலையில்லா புத்தகங்கள், அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது' என, புகார் வந்தது. நேற்று காலை குன்னூர் ஆர்.டி.ஓ., செல்வராஜ் தலைமையில், தாசில்தார் இன்னாச்சிமுத்து, வருவாய் ஆய்வாளர்கள் கந்தசாமி, கிராம நிர்வாக அலுவலர் மஜீத் மற்றும் போலீசார், குன்னூரில் ஒரு கடையில், திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், பிளஸ் 1 வகுப்புக்கான கணிதம், இயற்பியல், வேதியியல் உட்பட 296 புத்தகங்களில், 'அரசால் வழங்கப்படும் விலையில்லா புத்தகம்; விற்பனைக்கு அல்ல' என, எழுதப்பட்டுள்ள முதல் தாள் கிழிக்கப்பட்டு விற்பனை செய்வது தெரிய வந்தது. இதேபோல குன்னூர் தனியார் மேல்நிலைப்பள்ளியில் நடத்திய ஆய்வில், 67 புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன. மொத்தம் 363 புத்தகங்கள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில்,'கோவையில் உள்ள கடைகளில் இருந்து மொத்தமாக, அரசின் விலையில்லா புத்தகங்கள் வாங்கி வரப்பட்டன' என, தெரியவந்தது. குன்னூர் ஆர்.டி.ஓ., செல்வராஜ் கூறுகையில், " ரகசிய தகவலின் பேரில், நடத்திய ஆய்வில், 363 விலையில்லாத புத்தகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக, கடைக்காரர் மற்றும் ஸ்டேன்ஸ் பள்ளி முதல்வர் கிளமன்ட் குளோரின் ஆகியோர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது,” என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.