நாடெங்கிலும், நிர்ணயிக்கப்பட்ட தரமும், போதுமான வசதிகளுமின்றி, காளான்கள் போல் முளைத்துவரும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் குறித்து, மத்திய மனிதவள அமைச்சர் ஸ்மிருதி இரானி கவலை தெரிவித்துள்ளார்.
அத்தகைய கல்வி நிறுவனங்களை, தேவையான அளவில் கண்காணித்து, அவை நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளை அடைவதை உறுதிசெய்ய வேண்டுமாய் மாநில அரசுகளை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
"உங்களது கல்லூரிகளை அறியுங்கள் "Know Your College" எனும் டிரைவ், சிறந்த பயனை அளிக்கக் கூடியது. இதனால், வலைதளம் வழியே, ஒரு கல்லூரியைப் பற்றிய தேவையான தகவல்களைப் பெற்று, ஒரு மாணவர் பயன்பெற முடியும்" என்று அமைச்சர் கூறினார்.
டில்லியில் நடந்த உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்விக்கான மாநில அரசு செயலாளர்களின் கூட்டத்திற்கு, அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமை வகித்து பேசினார்.
உத்ரகாண்ட் மாநிலத்தில், இமாலயன் தொழில்நுட்பத்திற்கான மத்திய பல்கலைக்கழகத்தை சர்வதேச தரத்துடன் அமைக்கும் திட்டம் பற்றி அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
"நாட்டின் ஒதுக்குப்புற பகுதிகள், சிறுபான்மையினர், பழங்குடியினர் மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகள் தங்களுக்கான கல்வியைப் தடையின்றி பெறுவதற்கான சூழலை மாநில அரசுகள் உருவாக்க வேண்டும் மற்றும் பெண் கல்வி குறித்தும் மாநில அரசு போதுமான கவனம் செலுத்த வேண்டும்" என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
"வடகிழக்கு பிராந்தியத்தை சேர்ந்த மாணவர்கள், தங்களுக்கான உயர்கல்வி பெறுவதில் நிலவும் சிக்கல்களை களைய, பிரதான கல்வி நிறுவனங்களுடன், கூட்டு ஒத்துழைப்பை மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன" என்று அமைச்சர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment