Pages

Tuesday, June 17, 2014

தமிழ்நாடு அரசின் கைவிட்டுப் போகிறதா பள்ளிக்கல்வித்துறை

கோடை விடுமுறைகளுக்குப் பின்னர் பள்ளிகள் திறந்துவிட்டன. பொதுத் தேர்வு முடிவுகளைப் பார்த்தவர்களுக்கு வியப்போ வியப்பு! நகரங்களின் அனைத்து வசதிகளையும் பெற்றுப் படிப்பவர்களுக்கு இணையாக, கிராமப்புறப் பள்ளிகளின் பிள்ளைகளும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள்.

ஏழைப் பள்ளி, அரசுப் பள்ளி, கார்ப்பரேசன் பள்ளி என்று இளக்காரமாகப் பார்த்தவர்கள், தனியார் பள்ளி பற்றிப் பெருமையாகப் பேசியவர்கள் எல்லாம் இன்று வியப்போடு பார்க்கிறார்கள். இந்த வேறுபாடுகள் நீங்கியதற்குக் காரணம் சமச்சீர் கல்வியே என்பதை இப்போதுதான் தமிழகம் உணரத் தொடங்கியிருக்கிறது.
ஆனால் எப்போதும் வேற்றுமைகளைத் தோற்றுவிப்பதிலேயே குறியாக இருப்பவர்களும், ஏற்றத் தாழ்வுகளில் இன்பங் காணுகிறவர்களும் சும்மா கிடப்பார்களா? போதாக்குறைக்கு கல்வித் துறை இன்று பணம் கொழிக்கும் துறை! அதிலும், ப்ரீ கே.ஜி., எல்.கே.ஜி சேர்க்கவே லட்சக்கணக்கில் பணத்தை வைத்துக் கொண்டு, விண்ணப்பம் வாங்குவதற்கே பெரும் அதிகாரிகளும், பணக்காரர்களும் இரவெல்லாம் சாலையில் படுத்திருந்து இடம்பிடிக்கும் போது, அரசுப் பள்ளியிடமிருந்து எதை வேறுபடுத்திக் காட்டிப் பணம் பிடுங்க முடியும்? மேலும், மற்ற பிள்ளைகளைவிட என் பிள்ளை மேல் என்று பெருமை பேசுவதற்கு பள்ளிகளின் பெயர்களும், அவர்களும் கட்டியிருக்கும் தொகையும் தேவையாயிருக்கிறதென்று பெற்றோர்களும் நினைக்கிறார்களாமே! இதுதான் சாக்கென்று, இத்தனை நாள் மெட்ரிக்குலேசன் பள்ளி நடத்தி வந்தவர்கள் அதனினும் சிறப்பான சமச்சீர் கல்வி வந்தபிறகு, இரண்டும் இல்லாமல் சி.பி.எஸ்.இ-க்குப் போகிறார்கள் என்று ஆங்காங்கிருந்து தகவல்கள் வரத் தொடங்கின.
அது குறித்த தகவல்களை விசாரித்த போது தான், நடப்பது சிறிய அளவில் அல்ல என்பது புரிந்தது. மாநில அரசின் கண்காணிப்பில், கட்டுப்பாட்டில் இருந்த மெட்ரிக்குலேசன் பள்ளிகள் கொத்துக் கொத்தாக சி.பி.எஸ்.இ முறைக்கு மாறுவதை அறிய முடிந்தது. சி.பி.எஸ்.இ (மத்திய பள்ளிக்கல்வி வாரியம்) பாடத்திட்டத்திற்கு மாறுவது என்பது வெறும் பாடத்திட்ட மாற்றம் மட்டுமல்ல. மாறாக, தமிழக அரசின் கட்டுப்பாட்டிலிருந்தே விலகிச் செல்லுதல் ஆகும். இந்நிலை தொடர்ந்தால் அரசுப் பள்ளிகள் தவிர எதன் மீதும் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறைக்குக் கட்டுப்பாடு இருக்காது. அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை எவ்வளவு? தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை யோசித்துப் பார்த்தால் உங்களுக்கு நடக்க இருக்கும் ஆபத்தின் பரிமாணம் விளங்கும். இதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால் மாநில அரசின் கையில் இருக்கும் தொடக்கக் கல்வி, பள்ளிக்கல்வி உள்ளிட்டவை சத்தமில்லாமல் மத்திய அரசின் கைக்குப் போய்விடும்.
இந்திய அரசியலமைப்பின் தொடக்க காலத்தில் கல்வித்துறை மாநிலப் பட்டியலில் தான் இருந்தது. பின்னர் அவசர கால நிலையின் போது மத்திய மாநில அரசுகளுக்குப் பொதுவான பொதுப்பட்டியலுக்குக் கொண்டுசெல்லப்பட்டது. அடக்குமுறைக் காலத்தில் பெரிதாக எழ முடியாத எதிர்ப்பு, பின்னாளில் கிளம்பியபோதும், பொதுப் பட்டியலிலிருந்து அதை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற மத்திய அதிகார வர்க்கம் தயாராக இல்லை. மேலும், தன்னுடைய கரங்களை கல்வித் துறையை நோக்கி நீட்டி, அதனை கபளீகரம் செய்யவே முயன்றது. இதன் மூலம் மாநில உரிமைகளை நசுக்குவதுடன், இந்தித் திணிப்பிலும் எதிர்ப்பின்றி வெற்றி கண்டுவிடலாம். பாடத்திட்டத்தில் மாநிலங்களின் பண்பாடு, இனம், மொழி குறித்தவையெல்லாம் கிஞ்சிற்றும் இடம்பெறாது.
இத்தகைய ஆபத்தான போக்கை முளையிலேயே கெல்லி எறியாவிட்டால், மாநில சுயாட்சிக்கு அல்ல; மாநிலங்களின் அடிப்படை உரிமைகளுக்கே மீண்டும் சுழியத்திலிருந்து தான் போராட்டங்கள் தொடங்கப்பட வேண்டியிருக்கும். மாநில அரசுகள் என்ற அமைப்பையே கலைத்துவிட வேண்டும்; பல்வேறு பண்பாடுகள் என்ற அடையாளங்களை அழித்துவிட்டு ஒரே அகன்ற பாரதம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ள மோடியின் அரசுக்கு இத்தகைய வாய்ப்புகளெல்லாம் தானாகக் கனிந்த மரங்கள் போல! மறைமுகமாக நடைபெறும் இந்தப் பிரச்சினையில் போதுமான அளவு இன்னும் சமூக அமைப்புகள் கவனம் செலுத்தாமல் இருக்க, 09.05.2014 அன்று கூடிய திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு இப்பிரச்சினை குறித்த தொடக்க அடியினை எடுத்து வைத்துள்ளது.
மேல்நிலைப் பள்ளி வரை தமிழைக் கட்டாயம் படித்திட வேண்டும் என்ற இன்றைய கல்வித் திட்ட முறையைத் தவிர்க்கும் வகையிலும் தமிழ்நாடு அரசின் சமச்சீர் கல்வி முறையிலிருந்து தவிர்க்கவும் சி.பி.எஸ்.இ கல்வி முறைக்கு மாறும் போக்கு தமிழ்நாட்டில் அதிகரித்து வருவதை இக்கூட்டம் சுட்டிக்காட்டி, தமிழ்நாடு அரசு மத்திய அரசின் துணையோடு இதில் தலையிட்டு தடுத்து நிறுத்த ஆவன செய்யுமாறு இச் செயற்குழுக்கூட்டம் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது என்ற இந்தத் தீர்மானம் திராவிடர் கழகம் இப்பிரச்சினையைக் கையில் எடுத்துள்ளது என்பதற்கான நம்பிக்கைக் கீற்றாகும். இந்நிலையில் இந்தப் பிரச்சினையின் முழுப் பரிமாணத்தையும் விளக்க கல்வியாளர்களை அணுகினோம். சமச்சீர் கல்விப் பாடத் திட்டத்தினை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்த பேராசிரியர் அ.கருணானந்தம் அவர்கள் கூறும் போது, சமச்சீர் கல்வியை நோக்கிய முதல் அடியாக விளங்குவது இந்தப் பொதுப்பாடத்திட்டம். இது தமிழ்நாட்டில் அதுவரை இருந்து வந்த நான்கு வகையான பாடத்திட்டங்களை (எஸ்.எஸ்.எல்.சி, மெட்ரிக்குலேசன், ஆங்கிலோ இண்டியன், ஓரியண்டல்) ஒன்றிணைத்து உருவாக்கிய பாடத்திட்டமாகும். இது தரமற்றதாக உள்ளது என்னும் குற்றச்சாட்டு தவறானதும், கண்டிக்கத்தக்கதுமாகும். சமச்சீர் கல்வி என்பது சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. நீதிமன்றமும் இதை ஏற்றுக்கொண்டு உறுதிப்படுத்தியுள்ளது. சில பள்ளிகள் தற்போது சி.பி.எஸ்.இ.க்கு மாறக் காரணம் சமச்சீர் கல்விப் பாடத்திட்டம் அல்ல. அப்பள்ளிகளின் வணிக நோக்கமே என்று குற்றம் சாட்டினார்.
சமச்சீர் கல்விப் பாடத்திட்டத்திற்காக சட்ட ரீதியாகவும், மக்கள் மத்தியிலும் போராடியதோடு மட்டுமல்லாமல், பொதுப் பள்ளிகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவிடம் கேட்டபோது, அவர் மெட்ரிக் பள்ளிகள் தொடங்கப்பட்ட வரலாற்றிலிருந்து தொடங்கினார்.
தமிழ்நாட்டில் அரசினுடைய பாடத் திட்டமாக எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எல்.சி. இருந்த காலகட்டத்தில், பல்கலைக் கழகப் பாடத் திட்டமாக மெட்ரிகுலேசனும், ஆங்கிலோ இண்டியனும் பாடத்திட்டமாக இருந்தது. இவையிரண்டும் எஸ்.எஸ்.எல்.சி.யைவிட உயர்ந்தவை; இதனைப் படித்தால், பல்கலைக் கழத்திற்குச் செல்ல முடியும் என்ற ஒரு எண்ணம் மக்கள் மத்தியில் இருந்தது. இது திட்டமிட்டு காலனி ஆதிக்கத்தில் உருவாக்கப்பட்ட ஒரு செயல்பாடாகும்.
இந்தியா விடுதலை பெற்று ஒரு குடியரசாக ஆன பிறகு, தன்னுடைய பாடத் திட்டங்களை உருவாக்கி, எல்லோருக்கும் நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும் என்ற முயற்சியை மேற்கொண்டது.
அதனுடைய விளைவாக, 1970களில் மால்கம் ஆதிசேஷய்யா அவர்கள் துணைவேந்தராக இருந்த காலகட்டத்தில் சென்னைப் பல்கலைக்கழகம், இனி நாங்கள் பள்ளிக் கல்வியில் கவனம் செலுத்தவேண்டிய அவசியம் கிடையாது. நாங்கள் உயர்கல்வியைத் துறையை எடுத்துக் கொள்கிறோம்; பள்ளிக் கல்வியை அரசு பார்த்துக் கொள்ளட்டும் என்றது. இதற்குமுன் மெட்ரிக் பள்ளிகள் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.
ஆனால், அன்றைய அரசு இவர்களை மாநிலப் பாடத்திட்டத்தோடு இணைப்பதற்குப் பதிலாக,- மெட்ரிக்குலேசன் வாரியம் என்ற ஒன்றை உருவாக்கி, அதில் எல்லா மெட்ரிக்குலேசன் பள்ளி முதல்வர்களையும் உறுப்பினர்களாக்கி, அதற்கு ஒரு தனி அந்தஸ்தைக் கொடுத்து மெட்ரிக் பள்ளிகள் சுயநிதி ஆங்கில வழிப் பிரிவுகளாக இருக்கும் என்று சொல்லிவிட்டார்கள். ஆங்கிலோ இண்டியன் பள்ளிகளைப் பொறுத்தவரையில், அதில் படிப்பதற்கும் ஆங்கிலோ இண்டியன்கள் இல்லை. அவற்றுக்கென்று தனித்த சிறப்பான பாடத்திட்டமும் எதுவும் இல்லை.
அரசு உருவாக்கிய முத்துக்குமரன் குழு மேற்கொண்ட ஆய்வில், நான்கு பாடத்திட்டங்களின் உள்ளடக்கம் ஒன்றாகவே இருப்பதும், தனித்தனியான இந்தப் பெயர்களால் மாணவர்கள் மத்தியில் ஏற்றத் தாழ்வு ஏற்படுவதைத் தவிர வேறு பயன் எதுவும் இல்லை என்றும் கண்டறியப்பட்டது. எல்லோருக்கும் பொதுவான ஒரு பாடத்திட்டம் என்பது சரியானதாக இருக்கும் என்ற அடிப்படையில்தான் புதுப் பாடத்திட்டமான சமச்சீர் கல்வி என்று நாம் கூறும் பொதுப்பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள் என்று விளக்கினார்.
சமச்சீர் கல்விப் பாடத்திட்டத்தைவிட சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் சிறந்ததா?
சி.பி.எஸ்.இ. பள்ளிகள் எனபது மத்திய அரசு ஊழியர்களின் பிள்ளைகள் வசதிக்காக உருவாக்கப்பட்ட பள்ளிகள் ஆகும். அவை இந்தியா முழுவதும் உள்ள பொதுக்கல்விக்கான பாடத்திட்டம் அல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்தால் வளமான எதிர்காலமும் வேலைவாய்ப்பும் கொட்டிக்கிடக்கின்றன என்னும் மக்களின் அறியாமை இவர்களுக்கு ஒரு வாய்ப்பாகிவிட்டது. எனவே, ஏழை மக்களை ஈர்க்கவே இந்தப் பள்ளிகள் தற்போது இந்த மாற்றத்தை விரும்புகின்றன. பொதுப் பாடத்திட்டத்தைக் கொண்டு வந்துள்ள சூழலில் அவர்கள் தங்களது வணிகத்தைப் பெருக்குவதற்கு ஒரு புதிய பாடத்திட்டத்தை நோக்கிச் செல்ல வேண்டியுள்ளது என்ற பேராசிரியர் கருணானந்தத்தின் குற்றச்சாட்டைத் தான் பிரின்ஸ் கஜேந்திரபாபுவும் வழிமொழிகிறார்.
பள்ளி நிர்வாகத்தினுடைய பார்வையைப் பொறுத்தவரைக்கும், எஸ்.எஸ்.எல்.சி. என்ற ஒரு பாடப்பிரிவு இருந்த காலகட்டத்தில், மெட்ரிக் பள்ளிப் படிப்பு உயர்ந்தது என்று சொல்லி மக்களை ஏமாற்ற முடிந்தது; இப்பொழுது இரண்டிற்கும் ஒரே பாடத் திட்டம் என்றால், நாங்கள் ஏன் கூடுதலாகப் பணம் செலுத்தவேண்டும் என்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. சமச்சீர் கல்வி வந்து, இரண்டு, மூன்று தேர்வுகள் நடைபெற்றதும், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ -மாணவிகள், மெட்ரிக் பள்ளியில் படிக்கும் மாணவ -மாணவிகளைவிட அதிக மதிப்பெண் பெற்றதைப் பார்த்தனர்.
பிறகு, ஏன் தங்களுடைய பிள்ளைகளை மெட்ரிக் பள்ளியில் படிக்க வைக்கவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு வந்தது. மெட்ரிக் பள்ளிகளுக்கு ஏற்பட்ட பயத்தின் காரணமாக, தங்களுடைய சந்தை போய்விடுமோ என்கிற காரணத்தினால், சி.பி.எஸ்.இ.க்கு மாறிவிடுகிறார்களே தவிர, இவர்கள் பாடத் திட்டத்தை ஆய்வு செய்து, சி.பி.எஸ்.இ. தான் சிறந்த பாடத் திட்டம் என்று நிரூபித்து அதற்கு மாறவில்லை.
சி.பி.எஸ்.இ.-க்கு மாறவேண்டும் என்றால், 2005 ஆம் ஆண்டு என்.சி.ஆர்.டி. புதிய கல்வித் திட்டத்தைக் கொடுத்தவுடன், அதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட பாடத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு, அப்பொழுதே சி.பி.எஸ்.இ.க்குச் சென்றிருக்கலாமே! என்றும் கேள்வியெழுப்புகிறார்.
பெற்றோர் விரும்புவதால்தான் இப்படி பாடத்திட்டங்களை மாற்றுவதாக சில பள்ளி நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்துக் கேட்டபோது, இல்லை என்று ஆதாரத்தோடு மறுக்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
குறிப்பாக ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டுமானால், சென்னை வேப்பேரியில் ஒரு மெட்ரிக்குலேசன் உயர்நிலைப் பள்ளி உள்ளது. 175ஆண்டுகள் பாரம்பரியமான ஒரு பள்ளி அது. அந்தப் பள்ளி மெட்ரிக் பள்ளியாக இருந்தது. கடந்த ஆண்டு அந்தப் பள்ளி அய்.சி.அய்.சி. பள்ளியாக மாறுவதற்காக முயற்சி செய்து, பள்ளி நிர்வாகம் பெற்றோர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. உடனே பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து, ஒரு சங்கமாக உருவாக்கி, அந்தச் சங்கத்தின் சார்பாக நிர்வாகத்திற்கு ஒரு நோட்டீசைக் கொடுத்தார்கள்.
அந்த நோட்டீசில், நீங்கள் எந்த வகையில் இந்தப் பாடத்திட்டம் என்பது சி.பி.எஸ்.இ., அய்.சி.அய்.சி. பாடத்திட்டத்தைவிட குறைந்தது என்று சொல்ல வருகிறீர்கள். உங்களிடம் அதற்கான ஒப்பாய்வு ஏதாவது இருக்கிறதா? அப்படி இருந்தால், அந்த ஒப்பாய்வினை எங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அப்படி தெரியப்படுத்தாமல், நீங்கள் இந்த முயற்சியில் ஈடுபடக்கூடாது என்று சொல்லியிருந்தார்கள்.
இந்த நோட்டீஸ் கிடைத்த இரண்டு வாரத்தில், பள்ளி நிர்வாகம் ஏற்கெனவே கொடுத்த சுற்றறிக்கையைத் திரும்பப் பெறுகிறோம் என்று இன்னொரு சுற்றறிக்கையை அனுப்பினார்கள்.
அப்படிச் செய்த பிறகு, மறைமுகமாகப் பெற்றோர்களை அழைத்து, கட்டாயப்படுத்தி அய்.சி.அய்.சி.யில் சேர வைத்திருக்கிறார்கள்.
உடனே, நடந்தவற்றை விளக்கி அந்தப் பெற்றோர் சங்கம், பள்ளிக் கல்வி இயக்குநருக்கு ஒரு மனு கொடுத்தது. ஒரே பள்ளி வளாகத்தில் இன்னொரு சி.பி.எஸ்.இ. பள்ளி தொடங்குவதோ, அல்லது அய்.சி.அய்.சி. பள்ளி தொடங்குவதோ அல்லது இருக்கிற பள்ளியை அய்.சி.அய்.சி.யாக மாற்றுவதோ எங்களுக்கு ஏற்புடையதாகத் தெரியவில்லை. எனவே, அரசு இதற்கு என்.ஓ.சி. கொடுக்கக் கூடாது என்று சொல்லியிருந்தார்கள்.
இதிலிருந்து இரண்டு செய்திகள் தெரியவருகின்றன.
ஒன்று, பெற்றோர்கள் விரும்பி மாறுகிறார்கள் என்பது தவறு என்பதற்கு இது ஒரு சான்று.
இரண்டாவது, நிர்வாகத்திடம் எந்தவிதமான ஒப்பாய்வு அறிக்கையும் கிடையாது. இவர்கள் பாடத் திட்டத்தையெல்லாம் ஆய்வு செய்யவில்லை. ஒரு வணிக நோக்கத்திற்காகத்தான் மாறுகிறார்கள் என்பதற்கும் இதுவே சான்று என்றும் போட்டுடைத்தார்.
வணிகம் என்பதைத் தாண்டி இதனால் பள்ளி நிர்வாகங்களுக்கு வேறு ஏதேனும் ஆதாயம் இருக்கிறதா? என்ற சந்தேகமும் நமக்கு இல்லாமலில்லை.
மக்கள்தொகை காரணமாக மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வரும் சூழலில் அரசு ஏராளமான பொதுப் பள்ளிகளை உருவாக்க வேண்டும். ஆனால், அரசு உருவாக்கவில்லை. அந்தப் பணிகளை தனியார் பள்ளிகளிடம் தாரை வார்க்கின்றனர். ஆனால் தனியார் பள்ளி நிர்வாகங்களோ தமிழ்நாட்டிற்குள் உள்ள பொதுப் பாடத்திட்டத்திலிருந்தும் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருந்தும் விடுபடவே இவ்வாறு செய்கின்றனர் என்கிறார் பேராசிரியர் அ.கருணானந்தம். இந்தக் கருத்து உண்மைதான் என்பதை உறுதிப்படுத்துகிறது பிரின்ஸ் கஜேந்திரபாபு தரும் தகவல்.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தைப் பொறுத்தவரையில், ஒரே ஒரு தென்மண்டல அலுவலர்தான் இருக்கிறார். தென் மண்டலம் என்று சொன்னால், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், அந்தமான் நிகோபார் இவை அனைத்தும் சேர்ந்தது தென்மண்டலம். இதற்கு ஒரு மண்டல அலுவலர்தான். இவருடைய அலுவலகம் சென்னை அண்ணா நகரில் உள்ளது.
இவருடைய பணி என்னவென்றால், பாடத்திட்டத்தை பின்பற்றுகிறார்களா என பார்ப்பது, சுற்றிக்கைகளைக் கொடுப்பது, தேர்வு முடிவுகளை வெளியிடுவது போன்றவைதான். அவருடைய பணியாகும். நாள்தோறும் நடைபெறும் நிர்வாக நடவடிக்கையில் அவர் தலையிடமாட்டார். மாநில அரசுதான் தலையிட வேண்டும். ஆனால், மாநில அரசும் சி.பி.எஸ்.இ. நிர்வாகத்தில் தலையிடவில்லை. தங்களுடைய கட்டுப்பாட்டில் அதனை வைத்துக்கொள்ளவில்லை.
எனவே, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கு மாறிவிட்டால், யாரும் நம்மைக் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பது ஒரு காரணமாகும்.
இரண்டாவதாக, தமிழ் மொழி இல்லாமல் படித்து முடித்துவிடலாம்; இதனைத் தாண்டி மாநில அளவில் கல்விக் கட்டணத்திற்கென்று அளவுகோல் உண்டு. கண்காணிக்க அதிகாரிகள் உண்டு. கட்டமைப்பு உண்டு. இவை எதுவும் அங்கு கிடையாது. யாரும் அதற்காக முறையிடவுமில்லை; மாநில அரசும் தலையிடவில்லை. இதெல்லாம் பள்ளி நிர்வாகங்களுக்குக் கிடைக்கும் வசதிகள்.
இப்படி தனது கட்டுப்பாட்டிலிருந்து சி.பி.எஸ்.இ முறைக்கு மாறுவதைத் தடுத்து பள்ளிக் கல்வித் துறையை மாநில அரசு காக்க முடியாதா? தமிழ்நாடு அரசு ஆங்கிலவழியில் கல்வி கொண்டுவருவதாக சொன்னதுகூட மெட்ரிக் பள்ளிகளின் மாற்றத்துக்குக் காரணமாக இருக்குமா?
இல்லை. ஏனென்றால், அரசு ஆங்கிலவழிக் கல்வி கொண்டுவருவதாக அறிவிக்கும் முன்பும் பின்பும் கூட தடையின்மை சான்று கோரி பல பள்ளிகளின் சார்பில் மனு கொடுத்திருந்தார்கள். பல பள்ளிகளுக்குத் தடையின்மை சான்றும் வழங்கப்பட்டிருந்தது. அதற்குப்பிறகு சி.பி.எஸ்.இ. சார்பில் தடையின்மை சான்று தேவை இல்லை என்று திருத்தம் கொண்டுவந்துவிட்டார்கள். எனினும் திருத்தப்பட்ட விதிகளின்படி மாநில அரசு அல்லது யாராவது ஒருவர் எதிர்ப்புத் தெரிவித்தார்களானால், அப்போதுதான் தடையின்மை சான்று வாங்க வேண்டும் என்று உள்ளது. எனவே, மாநில அரசு இந்தப் பள்ளிகளின் வணிக நோக்கத்தையோ, ஒரே பள்ளி வளாகத்தில் இரண்டு பாடத்திட்டங்கள் கூடாது என்பதையோ எடுத்துக்காட்டி அங்கீகாரம் கொடுக்கக் கூடாது என்று எதிர்ப்புக் காட்டினால், திருத்தப்பட்ட விதிகளுக்குப்பிறகுகூட சி.பி.எஸ்.இ.யால் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார் பிரின்ஸ். இது குறித்து பேரா.கருணானந்தம் குறிப்பிடும் போது, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கு மாறுவதைத் தடுக்க வேண்டும் என்றால் முன்பு இருந்ததைப் போல் ஆறாம் வகுப்பு முதல்தான் தொடங்க முடியும். அதுவும் மாநில அரசின் அனுமதி பெற்றுத்தான் தொடங்கப்பட முடியும் என்ற விதிமுறைகளை மீண்டும் கொண்டு வர மாநில அரசு முயற்சி எடுக்க வேண்டும். ஆனால் மாநில அரசு இதையெல்லாம் தடுக்க முயற்சிகள் எதையும் எடுப்பதாகத் தெரியவில்லை. அரசு தனியார் கல்வி நிர்வாகங்களுக்குத் துணைபோகவே விரும்புகிறது என்று உண்மை நிலையை எடுத்துக் கூறுகிறார்.
கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருக்கிறது. பொதுப்பட்டியலில் இருப்பதால் மத்திய அரசு, மாநில அரசு இரண்டுபேருக்குமே உரிமை இருக்கிறது. பொறுப்பும் இருக்கிறது. ஒரே பொருளில் இரண்டு பேரும் சட்டம் கொண்டுவந்தால், மத்திய அரசு கொண்டுவரும் சட்டம்தான் செல்லும். அதே நேரம் பொதுப்பட்டியலில் இருந்தால் மாநில அரசுக்கு உரிமை கிடையாது என்றும் சொல்லமுடியாது. மேலும், கல்வி என்பது பண்பாட்டின் ஒரு கூறு. எனவே, ஒரு மொழிவாரி மாநிலம் என்கிற அடிப்படையில் ஒரு இனத்தினுடைய பண்பாட்டைக் காக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு இருக்கிறது. அந்த வகையில் கல்வியை பண்பாட்டுடைய ஒரு கூறாகப் பார்த்து அவர்கள் தங்களுடைய உரிமைகளையும், தாங்கள் கல்வித்திட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் மத்திய அரசுக்குத் தெரிவிக்க முடியும்.
73 நாடுகளைக் கொண்ட பிசா அறிக்கையில், எந்தெந்த நாட்டிலெல்லாம் அரசினுடைய பொறுப்பிலும், செலவிலும் கல்வி கொடுக்கப்படுகிறதோ, அந்த நாட்டில் எல்லாம் குழந்தைகளினுடைய கற்றல் திறமை அதிகமாக இருக்கிறது; எந்த நாட்டிலெல்லாம் தனியார் பள்ளிகள் அதிகமாக இருக்கிறதோ, அங்கே குழந்தைகளின் கற்றல் திறமை குறைவாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்.
உலகெங்கும் கல்வியாளர்கள் சொல்லும் இந்தக் கருத்து நம் மக்கள் காதில் விழாத வண்ணம் தடுத்துநிற்கும் போலி கவுரவப் போக்குகளும் மாற வேண்டும் என்பதும் உண்மையே!
இந்தப் பிரச்சினையைப் பொறுத்தளவில், பந்து இப்போது தமிழக அரசின் கையில் இருக்கிறது. தன்னிடம் இருந்து பள்ளிக்கல்வித் துறை பறிபோய்விடும் என்ற உண்மையாவது தமிழக அரசுக்குத் தெரியுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. ஆனால், இவற்றையெல்லாம் கடந்து, பொதுப் பள்ளிகளையும், அருகமைப் பள்ளிகளையும் அதிகப்படுத்துவதும், பாடத்திட்டத்தைச் செழுமையாக்குவதில் மேலும் கவனம் செலுத்துவதும், மக்களிடம் தனியார் பள்ளிகள் மேல் உள்ள மோகத்தைச் சரி செய்து, அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை விரிவாக்கி, ஆங்கில வழிப் பாடம் என்பதை விட மொழியாக இங்கிலீசிற்கு தனியிடம் தந்து பன்மொழி கற்கும் வாய்ப்போடு கூடிய தாய்மொழிக் கல்வி மூலமே உலக அரங்கை நோக்கிப் பயணிக்கலாம் என்ற நம்பிக்கை ஊட்டுவதிலும்தான் சரியான கல்விக்கான பாதை இருக்கிறது.
- சமா.இளவரசன்
உதவி : வை.கலையரசன், ச.பாஸ்கர்

3 comments:

  1. sama seerkalvi is very easy for matriculation students.without studying hard,they can score 100 marks,due to its quality.thats why this time many scored 100. as syllabus is easy they dont want to study in samaseerkalvi,because of that they go for cbse.

    ReplyDelete
  2. sama seerkalvi is very easy for matriculation students.without studying hard,they can score 100 marks,due to its quality.thats why this time many scored 100. as syllabus is easy they dont want to study in samaseerkalvi,because of that they go for cbse.

    ReplyDelete
  3. yen pa innum samacheerkalvi peyara solli yamathuringa, old education method is good. Innum diravida iyaakkangalai nampuringalay ungalai yennasolvadu, kadaulthan kappathanum.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.