Pages

Saturday, June 28, 2014

ஆசிரியர் - மாணவர் உறவை மேம்படுத்த பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா?

ஆசிரியர் - மாணவர் உறவை பலப்படுத்த முதல்கட்டமாக ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் தர பள்ளி கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


திருப்பூரில் வீரபாண்டி அரசு பள்ளியில் படித்த பிளஸ் 2 மாணவி சுவாதி, கடிதம் எழுதி வைத்துவிட்டு நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்டார். அம்மாணவி எழுதிய கடிதத்தில் "தன்னுடைய இம்முடிவுக்கு ஆசிரியர்கள் தன்னை நடத்திய விதமே காரணம்" என தெரிவித்துள்ளார். அதே நாளில் குமார் நகர் மாநகராட்சி பள்ளி பிளஸ் 2 மாணவன் ஸ்டீபன்ராஜ், வீட்டில் விஷம் அருந்திய நிலையில் மயங்கி கிடந்தார். அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்துள்ளார்.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு வெளியாகும்போது, தேர்ச்சியடையாத மாணவர்களில் சிலர், தற்கொலை என்ற தவறான முடிவெடுப்பது வழக்கம். தன்னுடன் படிக்கும் சக மாணவர்களை போல், படிப்பில் சிறந்து விளங்க முடியவில்லையே; படிப்பில் பின்தங்கிவிட்டோமே என்ற தாழ்வு மனப்பான்மை, தேர்ச்சி பெறாததால் மற்றவர்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாக நேருமே என்ற அச்ச உணர்வு, அவர்களை தற்கொலை என்ற முடிவுக்கு தள்ளி விடுகிறது.

விடலை பருவத்தில் வாழ்க்கை பற்றிய முழுமையான புரிதல் அவர்களிடம் இருப்பதில்லை. படிப்பு மட்டுமே வாழ்க்கைக்கு முக்கியம்; படிக்கவில்லை என்றால் எதிர்காலம் இருண்டு விடும் என ஆசிரியர்களும், பெற்றோரும் மாணவர்களுக்கு அடிக்கடி அறிவுறுத்தி, ஒருவிதத்தில் பயமுறுத்தி விடுகின்றனர்.

படிப்பில் பின்தங்கிய மாணவர்களிடம் மற்ற திறமைகள் இருந்தாலும், அதை வெளிக்கொணர ஆசிரியர்களோ, பெற்றோர்களோ அக்கறை காட்டாமல், அவர்களுக்கு விளங்காத, மனதில் பதியாத பாடத்தை படிக்குமாறு வற்புறுத்துகின்றனர். எப்போதும் படித்துக் கொண்டே இருக்குமாறு கட்டாயப்படுத்துகின்றனர். ஒரு கட்டத்தில் படிப்பு என்பது கசப்பான மருந்தாக அவர்களுக்கு மாறிவிடுகிறது.

ஆசிரியர்களில் சிலர் தங்களை கண்டிப்பானவர்களாக, மாணவர்கள் மத்தியில் காட்டிக்கொள்ள விரும்புகின்றனர். வகுப்பறையில் மாணவர்களிடம் நட்பாக பேசவோ, உரிமையாக பழகவோ முன்வருவதில்லை. தனித்திறமைகளை ஊக்கப்படுத்தவோ, உற்சாகப்படுத்தவோ ஆர்வம் காட்டுவதில்லை. நன்றாக படிக்கும் மாணவர்களை உதாரணமாக காட்டி படிப்பில் பின்தங்கியவர்களை வார்த்தைகளால் காயப்படுத்துகின்றனர்.

குடும்ப சூழல் சரியில்லாத நிலையில், பள்ளி வகுப்பறையிலும் மோசமான சூழல் நிலவுவது சில மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. வீட்டிலும், பள்ளியிலும் இறுக்கமான சூழல் நிலவும் பட்சத்தில், வாழ்க்கை மீது அதிருப்தியும், வெறுப்பும் அவர்களுக்கு ஏற்படுகிறது. அந்நேரங்களில் ஏற்படும் சின்ன சின்ன அவமானங்களும், தோல்விகளும் கூட அவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதன் விளைவாக தற்கொலை போன்ற தவறான முடிவை எடுக்கின்றனர்.

தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "இன்றைய காலகட்டத்தில் ஆசிரியர் - மாணவர் உறவு பலவீனமாகி விட்டது மறுக்க முடியாத உண்மை. குரு - சிஷ்யன் உறவு புனிதமானது. எதிர்கால இந்தியா வகுப்பறையில் கண்முன் அமர்ந்திருப்பதை, பல ஆசிரியர்கள் உணர்வதில்லை. ஒரு ஆசிரியர், நல்ல வழிகாட்டியாக திகழ வேண்டும்.

கல்வியோடு மட்டுமின்றி, வாழ்க்கை பற்றிய கற்பித்தலும் வகுப்பறையில் அவசியம். சிலபஸ் முடித்தால் போதும்; மாணவர்கள் தேர்ச்சி பெற்றால் போதும் என்பதே பல ஆசிரியர்களின் எண்ணமாக உள்ளது. இது மாற வேண்டும். மாணவர்களுடன் நல்லுறவு பேணுவது குறித்து ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் தர வேண்டும். அதற்கு கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

1 comment:

  1. ஆசிரியர் பற்றிய மாணவர்களின் தற்போதைய மனநிலை/எதிர்பார்ப்பு
    1.கண்டிக்கவோ அடிக்கவோ கூடாது
    2.வீட்டுப்பாடம் செய்யவில்லை , படிக்கவில்லை என்றாலும் கண்டு கொள்ளக்கூடாது

    இப்படி நடந்து கொண்டால் மட்டுமே மாணவர்களுக்கு ஆசிரியரை பிடிக்கும்.இதைத்தான் நமது RTE act ம் சொல்கிறது
    இதனால் தான்
    சிலபஸ் முடித்தால் போதும்; மாணவர்கள் தேர்ச்சி பெற்றால் போதும் என்பதே பல ஆசிரியர்களின் எண்ணமாக உள்ளது

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.