பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 250க்கும் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை, சில அரசு பள்ளிகளில் சேர்த்துக் கொள்ள மறுப்பதாக, பெற்றோர் மத்தியில் புகார் எழுந்துள்ளது.
கோடை விடுமுறைக்கு பின், இம்மாதம் 2ம் தேதி முதல், பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. நாளை (16ம் தேதி) முதல், மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புகள் துவங்க உள்ளன. பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நிறைவடைந்துள்ளது. பத்தாம் வகுப்பில் 250க்கும் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களை, சில அரசு பள்ளிகள் புறக்கணிப்பதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 2013-14ம் கல்வியாண்டில் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரை, மாணவ, மாணவியருக்கு மதிப்பெண் "எக்குத்தப்பாய்' வழங்கப்பட்டது. சராசரியாக படிக்கும் மாணவர்கள் கூட, 350 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றனர். எனினும், படிப்பில் பின்தங்கிய மாணவ, மாணவியர் சிலர், 250க்கும் குறைவான மதிப்பெண்களே பெற்றுள்ளனர். பள்ளிகளில், 450 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் மற்றும் கணினி அறிவியல் சார்ந்த "குரூப்', விருப்பப் பாடங்களாக வழங்கப்படுகிறது. 400, 350 மற்றும் 300 என மதிப்பெண் குறையும் பட்சத்தில், விருப்பப்பாடங்களுக்கு பதிலாக, மாற்று பாடங்கள் தரப்படுகின்றன. அதிலும், 250க்கும் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களை பிளஸ் 1 வகுப்பில் சேர்க்கவே, சில அரசு பள்ளிகள் விரும்புவதில்லை என தெரியவந்துள்ளது.
சில அரசு பள்ளிகளில், 220, 230, 240 என, 250 மதிப்பெண்ணுக்கு குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களை சேர்க்க, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. படிப்பில் மிகவும் பின்தங்கிய மாணவர்களை சேர்த்தால், பிளஸ் 2 பொதுத்தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெறுவது கஷ்டம். இரண்டு ஆண்டுகள், அவர்களோடு மல்லுக்கட்டி பாடம் நடத்த முடியாது என சில ஆசிரியர்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர். சிபாரிசு மற்றும் தவிர்க்க முடியாத காரணங்களால், அதில் சில மாணவர்கள் பள்ளியில் சேர்க்கப்படும் பட்சத்தில், அவர்களை ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியாக "டியூசன்' சென்று படித்துக் கொள்ளு மாறு, ஆசிரியர்கள் வற்புறுத்துவதாகவும் கூறப்படுகிறது. சிலர், அவர்களை தொழிற்கல்வி படிக்கச் செல்லுமாறும், வேறு பள்ளிக்கு திருப்பி அனுப்புவதாகவும், புகார் எழுந்துள்ளது.
பெற்றோர் சிலர் கூறுகையில், "படிக்காத மாணவர்களையும், படிக்க வைத்து தேர்ச்சி பெறச்செய்வதே ஆசிரியர்களின் கடமை. நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே, கல்வி அளிப்பது என்ற முடிவுக்கு ஆசிரியர்கள் வருவது, அவர்களது இயலாமையை வெளிப்படுத்துகிறது. "டியூசன்' சென்று படிக்கச் சொல்லும் ஆசிரியர்கள், ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவர்களால், அதற்கான கட்டணத்தை எப்படி தர முடியும் என்பதையும் யோசிக்க வேண்டும்,' என்றனர். பெற்றோர் மத்தியில் எழுந்துள்ள இப்புகார் குறித்து, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கண்காணித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
No comments:
Post a Comment