Pages

Friday, June 27, 2014

காலி ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மேட்டு சூளகரையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், ஆசிரியர்கள் காலி பணியிடத்தை நிரப்பக்கோரி, மாணவ, மாணவிகளை பள்ளிக்குள் அனுப்பாமல், பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மேட்டு சூளகரையில், அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் வரை நடுநிலைப்பள்ளியாக இருந்த, இப்பள்ளி, உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
இந்த பள்ளியில், பள்ளசூளகரை, மேட்டு சூளகரை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த, 180 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பள்ளியில், ஒரு தலைமை ஆசிரியர் உள்பட ஒன்பது ஆசிரியர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால், கடந்த ஆண்டில் இருந்து, இந்த பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர் உள்பட மூன்று ஆசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால், ஆறாம் வகுப்பு முதல், எஸ்.எஸ்.எல்.ஸி., வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் முறையாக பாடம் சொல்லி கொடுக்க முடியாத நிலை உள்ளது. மேலும், இந்த பள்ளியில், கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில், ஆசிரியர்கள் இல்லாததால், குறைந்த அளவே, தேர்ச்சி சதவீதம் வந்தது. இதனால், தங்கள் ஊரில் உள்ள பள்ளிக்கு, தேவையான ஆசிரியர்களை நியமிக்க, மேட்டு சூளகரைபகுதியை சேர்ந்த பொதுமக்கள், அதிகாரிகளிடம் பல முறை புகார் மனு அளித்தனர். ஆனால், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆத்திரம் அடைந்த பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள், நேற்று காலை மாணவ, மாணவிகளை பள்ளிக்கு உள்ளே அனுப்பாமல், வெளியிலேயே நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சசிகலாவதி, ஊத்தங்கரை தாசில்தார் அப்துல் முனீர், டி.எஸ்.பி., பாஸ்கர், கல்லாவி இன்ஸ்பெக்டர் குமரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று, பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, உடனடியாக மேட்டு சூளகரை அரசு உயர்நிலைப்பள்ளிக்கு, மூன்று ஆசிரியர்களை பணியமர்த்தி, அவர்களை பள்ளிக்கு அதிகாரிகள் வரவழைத்தனர். இதனையடுத்து, பெற்றோர்கள் அனைவரும் சமாதானம் அடைந்து, மாணவ, மாணவிகளை, பள்ளிக்குள் அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.