Pages

Sunday, June 29, 2014

மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு: இரண்டு பதில்களில் எதை அளித்தாலும் மதிப்பெண்: உயர் நீதிமன்றம் உத்தரவு - தினமணி

மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு கேள்விக்கான இரண்டு பதில்களில் எதை அளித்தாலும் அதற்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக பி.ஈஸ்வரி என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த மே 21-ஆம் தேதி நடந்தது. அந்தத் தேர்வில் நான் பங்கேற்றேன்.


அந்தத் தேர்வில் நான் 81 மதிப்பெண்கள் பெற்றேன். அந்தத் தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்டிருந்த 33-ஆவது கேள்விக்கு கடலினை மட்டும் குறிக்காத சொல்லைக் கண்டெடு என்ற கேள்விக்கு டி என்ற வாய்ப்பில் கொடுக்கப்பட்ட சமுத்திரம் என்பதை பதிலாக அளித்தேன். ஆனால், அந்தக் கேள்விக்கு எனக்கு மதிப்பெண் வழங்கவில்லை.

ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்த விடையில் 33-ஆவது கேள்விக்கு, பி என்ற வாய்ப்பில் கொடுக்கப்பட்ட ஆழி என்பதுதான் சரியான விடை எனத் தெரிவித்தது. அதற்கு என்னுடைய எதிர்ப்பை தெரிவித்தேன். எனவே, எனக்கு உரிய மதிப்பெண் வழங்கி பணியில் நியமிக்க உத்தரவிட வேண்டும் என கோரினார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.நாகமுத்து முன்பு நடந்தது. விசாரணையின்போது, தமிழில் நிபுணத்துவம் பெற்ற பல்வேறு பள்ளிகளில் பணிபுரியும் முதுநிலை தமிழ் ஆசிரியர்கள் 3 பேரிடம் இருந்து கருத்து கேட்கப்பட்டது. அவர்கள் ஆழிதான் சரியான பதில் எனத் தெரிவித்தனர். மேலும், சமுத்திரம் என்பது தமிழ்ச் சொல் இல்லை என்றும், வடமொழி சொல் எனவும் தெரிவித்தனர். அதனால், சமுத்திரம் என்பது சரியான பதில் இல்லை எனத் தெரிவித்தனர்.

விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கடலினை மட்டும் குறிக்காத சொல்லைக் கண்டெடு... என்ற கேள்விக்கு, 4 வாய்ப்புகளாக (ஏ) முந்நீர், (பி) ஆழி, (சி) பரவை, (டி) சமுத்திரம் என கொடுக்கப்பட்டன. இதில், (பி) ஆழிதான் சரியான பதில். அந்தச் சொல்லுக்கு, மோதிரம், சக்கரம், கடல் என்று 3 வெவ்வேறு பொருள்கள் உண்டு என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில் ..சமுத்திரம்... என்ற சொல்லுக்கு கடல், ஓர் எண், மிகுதி என்ற வெவ்வேறு பொருள்கள் உண்டு எனவும், சென்னைப் பல்கலைக்ழகத்தால் வெளியிடப்பட்ட தமிழ் அகராதியில் கடல், பேரெண், மிகுதி என பொருள் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, வேறு 2 தமிழ் அகராதிகளிலும் இது போன்ற பதில் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

நீதிமன்றம் நியமித்த தமிழ் நிபுணர்கள், "சமுத்திரம்' என்பது வடமொழிச் சொல்.

அதனால், அது சரியான பதில் இல்லை எனத் தெரிவித்தனர். "சமுத்திரம்' என்பது தமிழ்ச் சொல் இல்லையென்றால், தமிழ் அகராதியில் அந்த சொல் இடம் பெற்றிருக்காது. ஆனால், தமிழ் அகராதியில் அதற்கு 3 பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதனால், ஆசிரியர் தகுதித் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு கொடுக்கப்பட்ட பதில் முழுவதும் (நான்கும்) சரியானது இல்லை. அதேபோல் மனுதாரருக்கு எந்த ஒரு நன்மை வழங்கினாலும், அது தொடர்பான மற்றவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வில் கேட்கப்பட்ட 33-ஆவது கேள்விக்கு பி மற்றும் டி பதில் அளித்திருந்த அனைத்து தேர்வர்களுக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும்.

மேலும், அனைத்து விடைத்தாள்களையும் ஆசிரியர் தேர்வு வாரியம் மறுமதிப்பீடு செய்து, திருத்தப்பட்ட தேர்ச்சிப் பட்டியலை வெளியிட வேண்டும். இந்த பணியை ஒரு வாரத்துக்குள் ஆசிரியர் தேர்வு வாரியம் முடிக்க வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.