Pages

Sunday, June 1, 2014

மழைநீர் சேகரிப்பு கட்டாயம்

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பொய்த்து வருகிறது. கடந்த ஆண்டு, சென்னையை தவிர
மற்ற மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக தமிழக அரசு அறிவித்தது. நடப்பாண்டிலும் வறட்சி தொடர்கிறது. கொங்கு மண்டலத்தில் சுமார் 45 ஆயிரம் ஏக்கரில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளுக்கு மட்டுமே காவிரியாற்று நீர் கிடைக்கிறது. மற்ற பகுதிகளில் கிணற்று நீரை நம்பியிருக்க வேண்டியுள்ளது. ஆனால், பருவமழை போதிய அளவு கை கொடுக்காததால் இந்த மாவட்டங்களில் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து விட்டது. சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மட்டும் குறைந்தபட்சம் 50 ஆயிரம் தென்னை மரங்கள் பட்டுப்போயிருக்கலாம் என விவசாயிகள் கூறுகின்றனர். இந்த சூழ்நிலையில், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதன் மூலமே வருங்காலத்தில் விவசாயத்தை பாதுகாக்க முடியும். மக்களின் குடிநீர் பற்றாக்குறை பிரச்னைகளையும் தீர்க்க முடியும்.தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் 16,477 சிறு குளங்களும், 3,936 நடுத்தர குளங்களும் மழையை மட்டுமே நம்பி உள்ளது. இவற்றில் 2,600 கோயில் குளங்களும் அடங்கும்.

இவற்றில் 15 சதவீத குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த இடம் தெரியாமல் போய்விட்டதாகவும், 45 சதவீத குளங்கள், குப்பைகள் நிறைந்து குட்டையாக மாறியுள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது, 2 ஆயிரம் கோயில் குளங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்தி தண்ணீரை தேக்கி வைப்பதற்கான நடவடிக்கையை குடிநீர் வடிகால் வாரியம் மேற்கொண்டுள்ளது. இப்பணிகள் முடிவடைந்தால் வீணாகும் மழைநீர் தேக்கி வைக்கப்பட்டு, அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோயில் குளங்களில் மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு முறையை கட்டாயமாக்க வேண்டும். ஏற்கனவே தமிழக அரசு இந்த திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தியது. ஆனால், பெரும்பாலான கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் முறையாக பராமரிக்கப்படவில்லை. உள்ளாட்சித் துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக கண்காணிக்காததே இதற்கு காரணம். அடுத்த பருவமழை தொடங்குவதற்கு முன், மாநிலம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை தீவிரமாக அமல்படுத்தினால், பருவமழை காலத்தில் நிலத்தடி நீரை உயர்த்துவதற்கான வாய்ப்பாக அமையும். தொடர்ச்சியாக, இதை மேற்கொள்ளும்போது, சில ஆண்டுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறிப்பிடத்தக்க அளவில் உயரும் என்பதில் சந்தேகமில்லை

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.