ஸ்ரீபெரும்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் லோக்சபா ஓட்டு எண்ணிக்கைக்காக பயன்படுத்தப்பட்ட 24 அறைகள் சீரமைக்கப்படவில்லை. இதனால், மாணவர்கள் நேற்று வகுப்பு அறைகளில் உட்கார இடமின்றி அவதிப்பட்டனர்.
ஸ்ரீபெரும்புதூர், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஜவன்மால் ஜுக்ராஜ் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்து உள்ளது. இப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 650 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பள்ளியை ஸ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் மையமாக மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்தது.
இதைத் தொடர்ந்து வகுப்பறைகளுக்கு குறுக்கே இருந்த சுவர்கள் தகர்க்கப்பட்டு, பள்ளியில் மொத்தம் இருந்த, 28 வகுப்பறைகளில் 24 அறைகளை ஓட்டு எண்ணிக்கைக்கு ஏற்றபடி மாவட்ட பொதுப்பணித்துறையினர் மாற்றி அமைத்தனர். வகுப்பறைகளில் இருந்த மாணவர்களின் இருக்கைகள் அகற்றப்பட்டன.
உட்கார இடமில்லை
லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை கடந்த மாதம் 16ம் தேதி நடந்தது. அதன்பின், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன. வகுப்பறைகளை சுத்தம் செய்யாமல் அப்படியே போட்டுவிட்டு, தேர்தல் அதிகாரிகள் புறப்பட்டு விட்டனர். வகுப்பறைகளில் இருந்த ஏராளமான இருக்கைகள் மாயமாகிவிட்டதாக கூறப்படுகின்றன.
அதன் பின்னர், இப்பள்ளி கட்டடத்தை சீரமைக்க வருவாய்த் துறையினரும், பொதுப்பணித் துறையினரும் முன்வரவில்லை.
இந்நிலையில், கோடை விடுமுறைக்கு பின் நேற்று பள்ளிக்கு வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி வளாகத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வகுப்பறையில் உட்கார இடமின்றி மாணவர்கள் வரண்டாவிலும், மாடிப்படிகளிலும் உட்கார்ந்து இருந்தனர்.
பெற்றோர் புகார்
"பள்ளி கட்டடத்தை ஓட்டு எண்ணும் மையமாக செயல்பட அனுமதி வழங்கிய மாவட்ட ஆட்சியர், ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் பள்ளிக் கட்டடத்தை சீரமைப்பதில் அக்கறை காட்டவில்லை. அரசு பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தில் அதிகாரிகள் அலட்சியம் செய்கின்றனர்" என, மாணவர்களின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சீரமைப்பு பணிகளை துவக்கினால் எப்படியும் ஒரு மாதத்திற்கு நடக்கும் என்று கூறப்படுகிறது. வருகிற 5ம் தேதி தென்மேற்கு பருவ மழை ஆரம்பிக்க உள்ள நிலையில், மாணவர்களின் ஒரு மாத படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.