Pages

Tuesday, June 3, 2014

கற்றல் அடைவுத் திறனை மேம்படுத்த நடவடிக்கை: அகஇ முடிவு

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க, உயர் தொடக்க நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் அடைவுத் திறனை மேம்படுத்த அனைவருக்கும் கல்வி இயக்கம் முடிவு செய்துள்ளது.


கடலூர் மாவட்டம், கடலூர் மற்றும் விருத்தாசலம் என, இரண்டு கல்வி மாவட்டங்களை உள்ளடக்கியது. இரு கல்வி மாவட்டங்களிலும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் உயர்தொடக்க நிலைப் பள்ளிகள் 1,700 இயங்குகிறது. இப்பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகளின் கற்றல் அடைவுத் திறன் குறைந்து வருவதாக புகார் எழுந்தது. இதனால், கற்றல் அடைவுத் திறனை மேம்படுத்த குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்வது என, முடிவு செய்யப்பட்டது. இதற்காக, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 180 ஆசிரியர் பயிற்றுனர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

10 பள்ளிகளுக்கு ஒரு ஆசிரியர் பயிற்றுனரும், கல்வியில் பின்தங்கிய பள்ளிகளுக்கு 3 முதல், 5 ஆசிரியர் பயிற்றுனர் வரை ஒரு குழுவாக நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று, வழக்கம் போல் திறக்கப்பட்டன. ஆசிரியர் பயிற்றுனர்கள் அடங்கிய குழுவினர் இன்று (3ம் தேதி) முதல், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

ஆய்வின் போது, காலையில் பள்ளி துவங்கும் போது, குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆசிரியர்கள் பணிக்கு வருகிறார்களா, அவர்கள் கற்பிக்கும் விதம், மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன் ஆகியவை குறித்து கண்காணிக்கப்படும். கற்றலில் குறைபாடு உள்ள மாணவ, மாணவிகள் மீது கூடுதல் கவனம் செலுத்தி, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கவும், ஆசிரியர்களுக்கு ஆங்கில வழிக்கல்வி குறித்து புத்தாக்கப் பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "அரசு பள்ளிகளுக்கு தேவையான கட்டடம், கழிவறை,குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் நிறைவேற்றப்படுகிறது. தொடக்க மற்றும் உயர்தொடக்க நிலைப் பள்ளிகளில் கற்றல் அடைவுத் திறனை மேற்படுத்த ஆண்டுதோறும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இதற்கு கடந்தாண்டு நல்ல பலன் கிடைத்தது. இந்தாண்டும் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. கற்றல் அடைவுத் திறன் குறிப்பிட்ட இலக்கை அடையும் வரை ஆய்வு பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும்' என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.