Pages

Monday, June 23, 2014

மாணவிகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களே உஷார்! பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா?

பள்ளி வயதிலேயே மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பெற்றோர்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். மாவட்டத் தலைநகரான கடலூரில் ஆயிரக்கணக்கில் மாணவ மாணவியர்கள் படிக்கும் பள்ளிகள் ஏராளமாக பெருகிவிட்டன. ஒரு சில பள்ளிகளில் மாணவ-மாணவிகள் இருபாலரும் படிக்கும் நிலை உள்ளது.
அவ்வாறு படிக்கும் சக மாணவிகளிடம் மாணவர்கள், ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பது அதிகரித்துள்ளது. கடந்த வாரம் கடலூரில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவியர்களிடம் சக மாணவர்களே பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது. இதனால் பெற்றோர்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் கூட எல்லை மீறி தங்கள் பணிகளை மறந்து தண்டனை என்கிற போர்வையில் "சில்மிஷத்தில்' ஈடுபடுவதாக மாணவிகள் பெற்றோரிடம் புகார் தெரிவிக்கின்றனர்.

இளம் வயதில் ஏற்படக்கூடிய பாலியல் பிரச்னையை தவிர்க்க ஆசிரியர்கள் மட்டுமல்லாது பள்ளி நிர்வாகமும் நல்வழிப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. பொதுத் தேர்வில் பள்ளிக்கு நல்ல ரிசல்ட் கொண்டு வர வேண்டும் என்கிற நோக்கத்தோடு மாணவ மாணவிகளை இரவு 7.30மணி வரையில் சிறப்பு வகுப்பாக நடத்தப்படுகிறது. இந்த வகுப்பு முடிந்து வெளியூர் செல்லும் மாணவிகள் பஸ் நிறுத்தத்தில் வெகு நேரம் காத்துக்கிடக்க வேண்டியதாக உள்ளது. இதனால் மாணவிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக நேரிடுகிறது. மாணவிகள் பள்ளியை விட்டு வெளியே சென்று விடுவதோடு பொறுப்புகள் முடிந்துவிடுவதில்லை. இதற்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும்.மாணவிகளின் இப் பிரச்னையை தவிர்ப்பதற்காக சில பள்ளிகள் மாலை நேரத்தில் டியூஷன், சிறப்பு வகுப்பு நடத்துவதையே தவிர்த்து வருகின்றனர். பள்ளி முடிந்த உடன் மாணவிகளை நேரத்தோடு வீட்டிற்கு அனுப்புவதை கடைபிடித்து வருகின்றனர்.

அதிகாரிகள் அலட்சியம் : ரிசல்ட்டுக்காக மாணவிகளை வாட்டி வதைக்கும் பள்ளிகளை கல்வித்துறை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதில்லை. காரணம், கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக இலவச ஆடிட்டோரியம் பெறுவதற்காக பள்ளிகளிடம் இணக்கமான நல்லுறவை ஏற்படுத்தி கொண்டுள்ளனர். இதனால் பள்ளி நிர்வாகம் எந்த தவறை செய்தாலும் கல்வித்துறை கண்டுகொள்வதில்லை.

கண்காணிப்பு அவசியம் : பெற்றோர்கள் மிகவும் கஷ்டப்பட்டு பள்ளிகளில் இடம் வாங்கி சேர்ப்பதோடு கடமை முடிந்துவிடுவதில்லை. மாணவிகள் தினமும் பள்ளிக்கு செல்லும் வாகனங்களை கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது. ஒரு சில ஓட்டுனர்கள் மாணவர்களின் தவறான பாதைக்கு உறுதுணையாக உள்ளனர். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் படிக்க வைப்பதில் உள்ள ஆர்வத்தை விட அவர்கள் பாதுகாப்பாக பள்ளிக்கு சென்று வீடு திரும்பும் வரை கவனமாகவும், உஷாராகவும் இருக்க வேண்டியது அவசியம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.