மருத்துவ காப்பீடு பட்டியலில் இல்லாத டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை செலவை திரும்ப வழங்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. திருநெல்வேலியைச் சேர்ந்த அரசுப்பள்ளி இடைநிலை ஆசிரியை என்.சுசீலா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு இவ்வாறு உத்தரவிட்டார்.
மனுவில், அரசின் மருத்துவகாப்பீடு திட்டத்தில் எனது குடும்ப உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். எனது மகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நெல்லையில் உள்ள ரோஸ்மேரி மருத்துவமனையில் 2012 ஜன.17 முதல் மார்ச் 7 வரை சிகிச்சை பெற்றாள். சிகிச்சை கட்டணமாக ரூ. 4லட்சத்து 16 ஆயிரத்து 958 செலுத்தினேன். அரசின் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டதின் கீழ் இந்த தொகையை திரும்ப வழங்கக்கோரி விண்ணப்பித்தேன். காப்பீடு திட்டத்தில் உள்ளநோய்கள் பட்டியலில் டெங்கு காய்ச்சல் இல்லை எனக் கூறி அரசு நிராகரித்தது என குறிப்பிடப்பட்டிருந்தது.
இம்மனுவுக்கு பதிலளித்த அரசு வழக்குரைஞர் காப்பீடு திட்டம் தொடர்பான புகார்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு விசாரித்து முடிவெடுக்கும் என தெரிவித்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் பட்டியலில் இல்லாத நோய்க்கான செல்வுத் தொகையை மனுதாரர் கோரியுள்ளார். ஒருவர் தனக்கு எந்த வகையான நோய் வரும் என்பதை முன்கூட்டியே யூகித்து அறிய முடியாது. அதே போன்று பட்டியலில் இல்லாத பிற நோய்கள் வராது என அரசும் உறுதியாக கூற இயலாது. ஒரு திட்டத்தை செயல்படுத்தும்போது கூடுமானவரையில் சம்பந்தப்பட்டவருக்கு போதிய பலன் கிடைக்கும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டியது அவசியம். அதைவிடுத்து விதிகளை மட்டும் கையிலெடுத்து பலன் வழங்க மறுத்தால் அந்த தடையை நீக்க நீதிமன்றம் தயங்காது. எனவே டெங்கு காய்ச்சல், காப்பீடு திட்ட நோய்கள் பட்டியலில் இல்லை எனக்கூறி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் கோரும் தொகையை 8 வாரங்களில் திரும்ப வழங்க நெல்லை மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.