Pages

Saturday, June 21, 2014

வாத்தியார் வந்துட்டாரா? ஆன்லைனில் தெரியும்! 5.50 லட்சம் ஆசிரியர், 1.35 கோடி மாணவர்களின் விவரங்களுடன் தகவல் தொகுப்பு தொடக்கம்:

தமிழகம் முழுவதும் உள்ள 57 ஆயிரம் பள்ளிகள், 5.50 லட்சம் ஆசிரிய, ஆசிரியைகள், 1.35 கோடி மாணவ, மாணவிகள் பற்றிய விவரங்களை அறிந்துகொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள கல்வி தகவல் மேலாண்மை திட்ட வசதியை அமைச்சர் கே.சி.வீரமணி சென்னையில் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், அங்கு படிக்கும் மாணவ, மாணவிகள், பணியாற்றும் ஆசிரியர்கள் குறித்த விவரங்களை உடனடியாக தெரிந்துகொள்ளும் வகையில் சென்னை டிபிஐ வளாகத்தில் கல்வி தகவல் மேலாண்மை திட்ட மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தையும் ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டத்தையும் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

இந்த மையத்தில் கல்விசார் ஒருங்கிணைப்பாளர்கள் 10 பேர் பணியில் இருப்பார்கள். இங்கு லோக்கல் ஏரியா நெட்வொர்க் (லேன்) வசதியுடன் 25 கம்ப்யூட்டர்கள் பயன்பாட்டில் இருக்கும். இந்த புதிய தகவல் தொகுப்பு மைய வசதி குறித்து பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் டி.சபீதா நிருபர்களிடம் கூறியதாவது:

நாட்டிலேயே முதல்முறை
மாநிலத்தில் உள்ள பள்ளிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் குறித்த விவரங்களை அறிந்துகொள்ளும் வகையில் கல்வி தகவல் மேலாண்மை திட்ட மையம் அமைக்கப்படுவது நாட்டிலேயே இது முதல்முறை. புதுமையான இந்த திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா 2012-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி தொடங்கிவைத்தார்.

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் உள்பட 57 ஆயிரம் பள்ளிகள், 1.35 கோடி மாணவ, மாணவிகள், 5.5 லட்சம் ஆசிரிய, ஆசிரியைகள் குறித்த விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை மையம் மூலம் தெரிந்துகொள்ளலாம். பள்ளிக்கல்வித் துறையின் இணையதளத்தில் (www.tnschools.gov.in) சென்று இந்த தகவல் தொகுப்பு வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

10 ஆயிரம் சி.டி.க்கள் பதிவேற்றம்
அது மட்டுமின்றி மாணவர்கள் பயன்பாட்டுக்காக அவர்களது பாடங்கள், பாடங்களுக்கான விளக்கங்கள், வினா-வங்கி, சுய தேர்வு போன்றவை தொடர்பான 10 ஆயிரம் சி.டி.க்களும் இதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அவற்றை மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த தகவல்கள் பின்னர் சேர்க்கப்படும்.

மேலும், அரசு பள்ளி ஆசிரியர்களின் வருகைப்பதிவும் இங்கு ஆன்லைனில் பதிவாகும். இந்த தகவல் மையத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒன்றரை மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் அளிப்பார்கள்.
இவ்வாறு சபீதா கூறினார்.

2 comments:

  1. Athaium oru teacher tha dailyum entry podanum. Avanka class pathikum. Office staff illai. Or deputation

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.