Pages

Friday, May 16, 2014

தலைமை ஆசிரியர்கள் வாரம் இருமுறை ஆசிரியர்களின் செயல்பாடுகளை கண்காணித்து பதிவு செய்ய உத்தரவு

தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் செயல்பாடுகளை வாரம் இருமுறையாவது பார்வையிட்டு கண்காணிப்புப் பதிவேட்டில் பதிவுகள் செய்து அலுவலர்கள் பார்வையின் போது சமர்ப்பிக்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் லூ. ஜான் சேவியர்ராஜ் கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் புதன்கிழமை அனைத்து வகுப்புகளிலும் 100 சதவீதம் வாசிப்புத் திறனை உருவாக்குதல், மாணவர்களை தொடர் மதிப்பீடு செய்தல் மற்றும் பள்ளி நடைமுறைகளை மதிப்பீடு செய்தல் தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு வழிகாட்டு
நெறிமுறைகள் தொடர்பான சிறப்புக் கூட்டம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் செ. பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் லூ. ஜான் சேவியர்ராஜ் பேசுகையில் கூறியதாவது: நடுநிலைப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை எடுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணிபுரிய சம்மதித்தே நியமன ஆணை பெற்று பணி புரிகின்றனர். எனவே பள்ளியின் கல்வித் தர முன்னேற்றத்துக்கு தலைமை ஆசிரியர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்து ஆசிரியர்களும் உடன் ஒத்துழைத்து பள்ளி மாணவர்களின் கல்வித் தர வளர்ச்சிக்கு இணைந்து பாடுபட வேண்டும்.

தலைமை ஆசிரியர்கள் பள்ளியின் பாடத் திட்டம் செயல்படுத்துதல், பள்ளியின் வளர்ச்சி, பராமரிப்பு, சமூக நல்லிணக்கம், ஆசிரியர் ஒற்றுமை ஆகியவற்றுக்கு பொறுப்பானவர் ஆவார். 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை அனைத்து ஆசிரியர்களும் தினமும் வேலை செய்த விவரம் பற்றிய பதிவேட்டில் கண்டிப்பாக எழுத வேண்டும். இதில் பொதுவாக தமிழ், ஆங்கிலம், கணிதம் என்று எழுதக் கூடாது. அதே போல் பாடங்களின் பெயர்களை மட்டும் எழுதக் கூடாது. குறிப்பிட்ட பாட வேளையில் அந்த ஆசிரியர் வகுப்பறைகளில் மாணவர்களுக்கு என்ன கற்பித்தார் என்பதை சுருக்கமாக எழுத வேண்டும். 5ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை ஆசிரியர்கள் கண்டிப்பாக பாடக் குறிப்பு எழுத வேண்டும். பள்ளிகளின் செயல்பாடுகள் மாதம் ஒரு முறை முழுமையாக ஆய்வு செய்யப்பட்டால் தான், நிவர்த்திக்கப்பட வேண்டிய குறைபாடுகள் முரண்பாடுகளை விவாதித்து அவற்றுக்கு தீர்வு காண முடியும் என்பதால் ஒவ்வொரு மாதமும் புதன்கிழமை அன்று தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெறும். 2014-15ஆம் கல்வியாண்டில் ஒன்றியத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 100 சதவீதம் தேர்ச்சி அடைவைப் பெறுவது ஒன்றே குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டும். அதற்கு ஏற்றாற் போல் பள்ளி நடைமுறைகûளே செயல்படுத்திட அனைத்து தலைமை ஆசிரியர்களும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர். கூட்டத்தில் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் சுமார் 150 தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

1 comment:

  1. teachers hand book for english, tamil, science, maths, histry munbu pola veliyida vendum. panipbalu kuraikkapada vendum. education rules anaithum punaramaikkapada veendum,athigarigal ethil gavanam seluthavendum.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.