Pages

Wednesday, May 21, 2014

குறைகளை நிவர்த்தி செய்து மாணவர் சேர்க்கை அனுமதி பெற தீவிரம்

மருத்துவக் கவுன்சில் சுட்டிக் காட்டியுள்ள குறைகளை நிவர்த்தி செய்து, மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெறுவதற்கான பணிகளை அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர்.


புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லுாரி, அடிக்கல் நாட்டப்பட்ட நாளில் இருந்தே, சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. இருந்தபோதும், பல்வேறு தடைகளைத் தாண்டி, கடந்த 2010ம் ஆண்டில், இக்கல்லுாரி முறைப்படி துவக்கப்பட்டது. அரசு மருத்துவக் கல்லுாரியில், 150 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன.

முதலாமாண்டில் சேர்ந்த மாணவ மாணவிகள், தற்போது, நான்காம் ஆண்டு படித்துக் கொண்டுள்ளனர். அரசு கல்லுாரியாக இருந்தபோதும், உள்கட்டமைப்பு குறைபாடுகள் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும், மாணவர் சேர்க்கையின்போது இழுபறி ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது.

முதலாமாண்டு, மாணவர் சேர்க்கைக்கான அனுமதி, கோர்ட் தலையிட்டதால் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டும், சிக்கல் தொடர் கதையாக உள்ளது. கல்லுாரியை பார்வையிட்டு, ஆய்வு செய்த மருத்துவக் கவுன்சில் குழுவினர், பேராசிரியர் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்களில் குறைபாடு உள்ளிட்டவைகளை சுட்டிக் காட்டினர். இதன் எதிரொலியாக, மாணவர் சேர்க்கைக்கு, மருத்துவக் கவுன்சில் அனுமதி மறுத்து விட்டது. மருத்துவக் கல்லுாரிக்கு 12 பேராசிரியர்கள், 18 இணை பேராசிரியர்கள், 36 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு ஏற்கனவே விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது.

இருந்தபோதும், லோக்சபா தேர்தலை முன்னிட்டு, நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டது. நன்னடத்தை விதிகள் முழுமையாக வாபஸ் பெறப்பட்டுள்ள நிலை யில், காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை, சுகாதாரத் துறை செயலர் ராகேஷ் சந்திரா தலைமையில் அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர். ஏற்கனவே பெறப்பட்ட விண்ணப்பங்கள் துாசி தட்டி எடுக்கப்பட்டு, நேர்முக தேர்வுக்கு அழைப்பு அனுப்பப்பட உள்ளது. நேர்முகத் தேர்வு முடிந்த கையோடு, பணி நியமன ஆணைகள் உடனடியாக வழங்கப்பட உள்ளது.

மேலும், மருத்துவக் கவுன்சில் குழுவினர் சுட்டிக் காட்டியுள்ள, மற்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் முடிந்தவுடன், மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட உள்ளது. நடப்பு ஆண்டுக்கான, மாணவர் சேர்க்கைக்கு, இந்திய மருத்துவக் கவுன்சிலின் அனுமதி நிச்சயமாக கிடைத்துவிடும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.