Pages

Sunday, May 25, 2014

மாணவர்களின் பாதுகாப்பான பள்ளி பயணத்திற்கு 9 கட்டளைகள்

மாணவ, மாணவிகளின் பாதுகாப்பான பள்ளி பயணத்திற்காக 9 கட்டளைகளை போலீசார் வழங்கியுள்ளனர். கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதை தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக அண்ணா நகர், அம்பத்தூர் மற்றும் புளியந்தோப்பு ஆகிய போலீஸ் மாவட்டங்களில் கல்வி நிறுவன அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு இணை கமிஷனர் சண்முக வேல் தலைமை வகித்தார். 350க்கும் மேற்பட்ட கல்வி நிறுவன அதிகாரிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கல்வி நிறுவனங்களுக்கு போலீசார் வழங்கிய ஆலோசனைகள்:

* கல்வி நிறுவனங்களின் நுழைவாயிலில் கண்காணிப்பு கேமரா பொருத்தி குழந்தைகளை பள்ளிக்கு வரும் போதும், பள்ளி முடித்து திரும்பும் போதும் பாதுகாப்பாக செல்கிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும்.
* குழந்தைகள் போக்குவரத்திற்காக நியமித்துள்ள வாகன ஓட்டுனர்கள், உதவியாளர்கள் ஆகியோரின் விவரங்கள் முழுமையாக தெரிந்து கொள்ளவும்.
* பள்ளியில் நியமித்துள்ள ஆளினர்களின் புகைப்படம், தொலைபேசி எண் மற்றும் முகவர் ஆகியவற்றை வைத்து அவர்களின் பின்புலத்தை தீவிரமாக விசாரிக்கவும்.
* பெற்றோர் தங்கள் குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனத்தினுடைய வாகன ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆகியோர்களின் விவரங்களை தெரிந்து வைத்து கொள்ளவும்.
* கல்வி நிறுவனங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து ஒரு பொறுப்பான நபரை நியமித்து குழந்தைகள் பள்ளிக்கு பாதுகாப்பாக வந்து செல்கின்றனரா என்று கண்காணிக்கவும்.
* அருகில் உள்ள காவல் நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு பாதுகாப்பு குறித்து அவ்வப்போது, ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
* பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கலந்தாய்வு நடத்தி குழந்தைகளின் தேவைகள், நடத்தை மற்றும் பாதுகாப்பு குறித்து கலந்தாய்வு செய்யவும்.
* பள்ளியில் போக்குவரத்திற்காக பயன்படுத்தக்கூடிய வாகனங்கள் தரமானதாக வைத்துக் கொள்ளவும்.
* குழந்தைகளுக்கு காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை மூலமாக பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.