Pages

Sunday, May 18, 2014

25 சதவீத ஒதுக்கீட்டில் பெற்றோர் ஆர்வம் குறைவு: சென்னை மாவட்டத்தில் 65 விண்ணப்பங்களே விநியோகம்

தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் சேர சென்னை மாவட்டத்தில் 65 விண்ணப்பங்களை மட்டுமே இதுவரை பெற்றோர்கள் வாங்கிச்சென்றுள்ளனர். இவர்கள் தவிர அந்தந்த தனியார் பள்ளிகளிலும் சில பெற்றோர்கள் விண்ணப்பங்களை வாங்கியிருக்கலாம் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


சென்னை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 1,551 மாணவர்கள் இந்த ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு இந்த ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களைச் சேர்க்க பெற்றோர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்துள்ளது. பல பள்ளிகளில் இந்த ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பங்களை வழங்க மறுப்பதாகவும் கல்வித் துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, இந்த ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பங்களை யாருக்கும் மறுக்கக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் மீண்டும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. மேலும், இதுதொடர்பான விவரங்களை பள்ளிகளின் தகவல் பலகைகளில் ஒட்ட வேண்டும் எனவும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் வலியுறுத்தியுள்ளது.

இலவசக் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., முதல் வகுப்பு, ஆறாம் வகுப்பு உள்ளிட்ட அறிமுக வகுப்புகளில் மொத்தமுள்ள இடங்களில் 25 சதவீத இடங்கள் ஏழைகள், நலிவடைந்த பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

இந்த ஒதுக்கீட்டின் கீழ் தமிழகத்தில் 3,550 மெட்ரிக் பள்ளிகளில் 58,619 இடங்கள் உள்ளன. இதில் கடந்த ஆண்டு 23,428 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். சென்னை மாவட்டத்தில் மட்டும் 1,551 மாணவர்கள் எல்.கே.ஜி. வகுப்பிலும், 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆறாம் வகுப்பிலும் சேர்க்கப்பட்டனர். சென்னையில் மொத்தமுள்ள 4 ஆயிரம் இடங்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமான இடங்கள் கடந்த ஆண்டு நிரப்பப்பட்டன.

இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தை அரசு வழங்கவில்லை எனக் கூறி இந்த ஆண்டு இந்த ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களைச் சேர்க்க மாட்டோம் என தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்தது.

இதையடுத்து, கடந்த 2013-14 ஆம் கல்வியாண்டில் இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்த 23,428 மாணவர்களுக்கான கட்டணம் ரூ.25 கோடி 3 மாதங்களில் திருப்பி வழங்கப்படும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் உறுதியளித்தார்.

இதைத் தொடர்ந்து, இந்த ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு சம்மதம் தெரிவித்து தனியார் பள்ளி நிர்வாகிகள் கடிதம் வழங்கினர்.

இந்த ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு, அந்தந்த பள்ளிகளிலும், சென்னை எழும்பூரில் உள்ள மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகத்திலும் இதற்கான விண்ணப்பங்கள் மே 18 வரை இலவசமாக விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அலுவலகத்தில் இதுவரை 65 விண்ணப்பங்களை மட்டுமே பெற்றோர்கள் வாங்கிச் சென்றுள்ளனர். அந்தந்த பள்ளிகளில் பெற்றோர்கள் விண்ணப்பங்களை வாங்கிச் சென்றிருந்தாலும், மொத்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட மிகவும் குறைவாகவே இருக்கும் எனத் தெரிகிறது. இந்த ஒதுக்கீடு குறித்து கல்வித் துறையும், தமிழக அரசும் பெற்றோர்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.