Pages

Monday, April 21, 2014

பள்ளிகளில் மாணவர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்வதில் இழிவு ஒன்றும் இல்லை': உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, "பள்ளிகளில் மாணவர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்வதில் இழிவு ஒன்றும் இல்லை' என நல்லதொரு தீர்ப்பை அளித்துள்ளது. அண்மைக் காலமாக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மாணவர்களைக் கொடுமைப்படுத்துவதாகவும், மாணவர்கள் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளாகி வருவதாகவும் சில தனி நபர்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், ஏன், அரசியல் கட்சிகளும் கூட உருவாக்கி வருவது வேதனை அளிக்கும் செயலாகும்.


அரசுப் பள்ளிகளில் கழிப்பறைகளை மாணவர்களைக் கொண்டு சுத்தம் செய்யும் நடைமுறையை தடுக்க வேண்டும் எனக் கேட்டு அரசியல் கட்சி ஒன்றின் பிரதிநிதி தொடர்ந்த பொதுநல வழக்கில்தான் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.தீர்ப்பை அளித்த நீதிபதி, தனது வீட்டின் கழிப்பறையை தானே சுத்தம் செய்வதாகக் கூறியதோடு, கழிப்பறை சுத்தம் செய்தலை ஒரு குறிப்பிட்ட சாதிதான் செய்ய வேண்டும் என்ற சாதிய கட்டமைப்பை அகற்றவும், சமத்துவ சமுதாயம் அமையவும், தனி மனிதனின் அகந்தை அகலவும் மகாத்மா காந்தி கூறிய சில வரிகளை மேற்கோள் காட்டியுள்ளார்.இன்றைய நாகரிகச் சூழ்நிலையில் பள்ளிகளின் சூழல் பெரிதும் மாறிவிட்டது. முன்பெல்லாம் கிராமப்புற பள்ளிகளின் அன்றாட பராமரிப்பை மாணவ, மாணவிகளே மேற்கொள்வது வழக்கம். குறிப்பாக, பள்ளியை சுத்தம் செய்வது, வகுப்பறைகளுக்கு தண்ணீரை பிடித்து வந்து மண் பானைகளில் கொட்டி வைப்பது, கரும்பலகைகளை சுத்தம் செய்வது, மாதந்தோறும் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் வகுப்பறைகளில் ஒட்டடையை அகற்றுவது, ஆசிரியர்களின் இரு சக்கர வாகனம் மற்றும் சைக்கிள்களை சுத்தம் செய்வது என மாணவர்களின் கல்வி சாரா பணிக்கென ஒரு நீண்ட பட்டியலே இருக்கும். அந்த பணிகளை மேற்கொள்ள, பாட கால அட்டவணை போன்றே தனியாக ஒரு அட்டவணை தலைமை ஆசிரியரின் இருக்கைக்கு எதிரே உள்ள சுவரில் தொங்கி கொண்டிருக்கும்.சுழற்சி முறையிலான இந்தப் பராமரிப்புப் பணிகள் முறையாக நடைபெறாவிட்டாலோ அல்லது ஏதேனும் குறை இருந்தாலோ தலைமை ஆசிரியர் அல்லது பொறுப்பாசிரியரிடமிருந்து "ஓலை' வரும். அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்லியாக வேண்டும். சில வேளைகளில் பாராட்டும் வரும்.இதற்கு அன்று யாரும், எந்த பொதுநல அமைப்பும், அரசியல் கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாக, பள்ளியை சுத்தம் செய்யும் பணி இருக்குமானால் பெற்றோரே பிள்ளையை அதிகாலையில் எழுப்பி அனுப்பி வைப்பார்கள். மாணவர்கள் மனம் விரும்பி அந்தப் பணிகளை செய்தார்கள். கல்வியோடு வாழ்வியல் நடைமுறைகளையும் அவர்கள் கற்றார்கள். அதனால் வாழ்வில் உயர்ந்தார்கள்.பள்ளிகளில் மாணவர்கள் பெறும் இந்த அடிப்படை வாழ்வியல் பயிற்சிகள் அவர்களது பிற்கால வாழ்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை இந்த "பொதுநலன்' காப்போர் அறிய வேண்டும். பள்ளியில் அத்தகைய பயிற்சி பெற்றவர்கள் தலைமைப் பண்பை பெறுதல், பொருள்களை முறையாக பராமரித்தல், தனது தேவைகளுக்கு மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்காமல் தானே நிறைவேற்றிக் கொள்ளுதல் போன்ற பல வகைகளில் அதன் பயனை பிற்காலத்தில் அனுபவிப்பர். இன்றும் கூட மேல்தட்டு மக்களின் குழந்தைகள் பயிலும் சில தனியார் பள்ளிகளில் அவ்வப்போது வாழ்வியல் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஆனால், அதற்கு வாயில் எளிதில் நுழையாத ஒரு பெயரை சூட்டி, அபரிமிதமான கட்டணத்தையும் வசூலிக்கின்றனர். அங்கெல்லாம் இந்த "பொதுநல' விரும்பிகளின் கவனம் செல்லாது. மாறாக, அதை புகழ்ந்து பேசிக் கொள்வோரும் உண்டு. காரணம், அவர்களது குழந்தைகள் அங்கே கல்வி பயின்று கொண்டிருக்கும். அரசு பள்ளிகளில் எளிமையாக, அன்றாட நடைமுறைக்கு ஏற்ப அளிக்கப்படும் வாழ்வியல் பயிற்சிகளில்தான் இவர்களால் குறை காண முடிகிறது."நாடு தற்சார்புடையதாக மாற வேண்டும்; எவரையும் சார்ந்திருக்க கூடாது' என வாய் வலிக்க பேசுகிறோம். அதன் முதல்படியாக தனி மனிதன் தற்சார்புடையவனாக வாழ வேண்டாமா? அதற்கான பயிற்சிக் களங்கள்தான் பள்ளிகள்.அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆசிரியர்கள் மாணவர்களிடம் வரம்பு மீறி நடந்து கொண்டிருக்கலாம். ஆனால் அவையெல்லாம் தனிப்பட்ட சம்பவங்களாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும். அவற்றை நீக்குவதற்கு வழிவகை காணப்பட வேண்டும். அவற்றைப் பொதுமைப்படுத்தி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளால் பாதிப்பு மாணவர்களுக்குதானே தவிர ஆசிரியர்களுக்கல்ல. இதை பெற்றோரும், அரசும் புரிந்து கொண்டால் இந்த போலியான "பொதுநல' விரும்பிகள் ஓடி ஒளிந்து கொள்வார்கள்.

16 comments:

  1. நாடுவளர ்நல்லதொரு தீர்ப்பு வழங்கிய நல்ல உள்ளம் கொண்ட இந்நாள் நீதியரசர் (முன்னாள் மாணவர் ) வாழ்க!!!

    ReplyDelete
  2. ethe mathiri neraya perachanaikal iruku athayellam kurukeya manapanmaioda pakuraval kite irunthu samuthayatha kapathura nalla therpu

    ReplyDelete
  3. நல்ல தீர்ப்பு

    ReplyDelete
  4. Hope this will be a beginning for a healthy India.

    ReplyDelete
  5. Gandhi kanda india- vukkana muthal self disciplined education-good judgment, but govt should appoint proper sanitary workers to carry out these activities.

    ReplyDelete
  6. Good decision Sir. We Teacher's salute your verdict.

    ReplyDelete
  7. When I was a student I like to clean school campus

    ReplyDelete
  8. நீதிபதி அவர்கள் பெற்றுள்ள சமூக ஞானம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ?

    ReplyDelete
  9. Nethi adi.super judgement.some (BLACK SHEEP)teachers also better stop threatening HM and other teachers.

    ReplyDelete
  10. itdha than edhirparthom.neethipathikku asiriyarkalin vanakkangal.

    ReplyDelete
  11. மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.