Pages

Friday, April 25, 2014

தேர்தல் பணிக்கு வந்த ஆசிரியை ரெயிலில் சிக்கி பலி

அரக்கோணம் தர்மராஜா கோவில் அருகே உள்ள பால்காரர் சுப்பிரமணிய தெருவை சேர்ந்தவர் அன்பழகன் மத்திய பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பூங்கொடி(வயது48).அரக்கோணம் குமினிபேட்டை அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். தம்பதிக்கு சிவராஜ் என்ற மகன், சசிகலா(22) என்ற மகள் உள்ளனர்.

பூங்கொடிக்கு வாணியம்பாடி அருகே உள்ள தும்பேரி நடுநிலைப் பள்ளியில் தேர்தல் பணி வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் தும்பேரி சென்றார். அங்கு நேற்று தேர்தல் பணியில் ஈடுபட்டார். ஓட்டுப்பதிவு எந்திரங்களை பாதுகாப்புடன் தேர்தல் அதிகாரிகள் எடுத்து செல்ல நள்ளிரவு ஆனது. இதனையடுத்து வேகமாக பணிகளை முடித்து விட்டு அந்த வாக்குச்சாவடியில் இருந்த அனைவரும் ஊருக்கு செல்ல வாணியம்பாடி ரெயில் நிலையத்துக்கு வந்தனர்.
நள்ளிரவு 1.30 மணிக்கு பூங்கொடி அரக்கோணம் ரெயில்கள் நிற்கும் இடத்துக்கு செல்வதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ஜோலார்பேட்டை நோக்கி வேகமாக வந்த காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் பூங்கொடி மீது மோதியது.
ரெயில் என்ஜினீல் சிக்கிய ஆசிரியை உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது உடலின் ஒருபகுதி ரெயிலில் தொங்கியபடி சுமார் 200 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டது. இதனால் ரத்தம், சதையுமாக அவரது உடல் சிதறியது. இதனை பார்த்து அவருடன் வந்த ஆசிரியர்கள் திடுக்கிட்டு அலறினர். இதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆசிரியை உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசிரியை பூங்கொடியின் மகள் சசிகலாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற 4–ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது. பூங்கொடியும் அவரது கணவரும் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். திருமண மகிழ்ச்சியில் இருந்த நேரத்தில் பூங்கொடி இறந்ததால் அவரது குடும்பத்தினர் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.