Pages

Saturday, April 26, 2014

ஆசிரியர்கள் ஏமாற்றம்:தேர்தல் பயிற்சி பெற்றவர்களுக்கு பணம் இல்லை; பணியிலும் குழப்பம்

தேர்தல் பணிக்காக 3 நாள் பயிற்சிக்கு சென்ற ஆசிரியர்களுக்கு கலெக்டர்கள் உரிய பணம் வழங்கவில்லை. தேர்தல் பணிக்கான உத்தரவிலும் குழப்பம் இருந்ததால் பல இடங்களில் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட முடியவில்லை. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் பூத் அதிகாரி உள்ளிட்ட பணிகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
முன்னதாக அவர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. கடந்த வாரம் நடந்த 3 நாள் பயிற்சியில் பங்கேற்ற பல ஆசிரியர்களுக்கு உரிய பணம் வழங்கப்படவில்லை. இதுதவிர தேர்தலுக்கு முதல்நாள் இரவுதான் ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன. அதன்பிறகு தேர்தல் பணிக்கான இடங்களை கண்டுபிடித்து செல்வதில் ஆசிரியர்கள் சிரமப்பட்டனர். கலெக்டர்கள் வழங்கிய உத்தரவில் பல குழப்பங்கள் இருந்ததால் குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளுக்கு செல்ல முடியாமல் பல ஆசிரியர்கள் திரும்பினர். மேலும் தேர்தல் பணிக்கு செல்ல வேண்டிய ஆசிரியர்களுக்கு வாகன வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை. வாக்குச் சாவடிகளில் அவர்கள் தங்குவதற்கு ஏற்ற இடவசதியும் செய்யப்படவில்லை.
உணவும் பிரச்னைதான். இதேபோல தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கான வாய்ப்பும் வழங்கப்படவில்லை என்று ஆசிரியர்கள் ஆதங்கப்பட்டனர். மேலும் படிவம் 12பி மற்றும் 12 படிவம் ஆகியவற்றை பூர்த்தி செய்து கொடுத்த ஆசிரியர்களுக்கும் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யவில்லை என்ற குறை உள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், சேலம் மாவட்டங்களில் இதுபோல் பாதிக்கப்பட்ட, அலைக்கழிக்கப்பட்ட ஆசிரியர்கள், கலெக்டர்களிடம் புகார் கொடுத்திருக்கின்றனர். இதன் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்து பயிற்சிக்கான பணம் வழங்கவும், தபால் வாக்களிக்கவும் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.