Pages

Tuesday, April 15, 2014

ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு எங்கே நடக்கிறது அதிகாரபூர்வ தகவல் வராததால் குழப்பம்

தேர்தல் பயிற்சி வகுப்பு எங்கே நடக்கிறது என்று அதிகாரபூர்வமாக தகவல் வராததால் ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் வருகிற 24-ந் தேதி நடைபெறுகிறது. அதற்கான முன் ஏற்பாடுகள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டு வருகின்றன. தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 3 லட்சம் பேர் ஈடுபட உள்ளனர்.


தேர்தல் அன்று தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழ்நாட்டில் பல்வேறு மையங்களில் ஆசிரியர்களுக்கு தேர்தல் சம்பந்தபட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சியில் கலந்துகொள்ள உள்ள ஆசிரியர்கள் சிலருக்கு அவர்கள் எந்த மையத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்பது குறித்து கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால் பலருக்கு கடிதம் அனுப்பப்படவில்லை. அதனால் எந்த மையத்தில் பயிற்சி என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.
இது குறித்து ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:-கடந்த முறை பயிற்சி வகுப்புக்கும் முறையான கடிதம் வரவில்லை. முறையான தகவல்தெரிவிக்க வேண்டும்

முன்பு ஒரு இடத்தில் நடந்த பயிற்சி 15-ந் தேதி (இன்று) 3 இடங்களில் நடக்கிறது. பள்ளிக்கூடங்களுக்கு செல்ல உள்ளோம். பயிற்சியில் கலந்துகொள்ள உள்ள யாராவது சம்பந்தப்பட்ட மையங்களுக்கு சென்று உங்கள் பெயர் இந்த பலகையில் இருக்கிறது என்று சொன்ன பிறகுதான் பள்ளிக்கூடத்தில் இருந்து செல்ல வேண்டும். அதற்குள் பயிற்சி பாதி முடிந்து விடும். அப்படியே சென்றாலும் அங்குள்ள அதிகாரிகளும் ஏன் தாமதமாக வருகிறீர்கள் என்கிறார்கள்.

கடந்த சட்டமன்ற தேர்தலிலும் இதே நிலைதான் இருந்தது. தகவல் தெரியாமல் பயிற்சிக்கு செல்லாத ஆசிரியர்களுக்கு ‘மெமோ’வும் கொடுக்கப்படுகிறது. ஆசிரியர்கள் தேர்தல் பணி செய்ய தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு முறையான தகவல் தெரிவிக்க வேண்டியது தேர்தல் அதிகாரிகளின் கடமை.

பெண் ஆசிரியர்களை பொறுத்தவரை பயிற்சி நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பாக தகவல் தெரிவித்தால் தான் நல்லது. தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் இது குறித்து நடவடிக்கை எடுத்து இனிமேலாவது தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.