Pages

Tuesday, April 1, 2014

அரசு ஊழியர்கள், தேர்தல் பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை

தேர்தல் பணிக்கு, தேர்வு செய்யப்பட்டுள்ள ஊழியர்கள், பணிக்கு வராவிட்டால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது: தமிழகத்தில், வரும், 24ம் தேதி, 39 லோக்சபா தொகுதிகளுக்கும், ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கும், ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 60,418 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

மின்சாரம், குடிநீர் : இனி, புதிதாக ஓட்டுச்சாவடி அமைக்கப்படாது. ஒரு ஓட்டுச் சாவடியில், அதிகபட்சம், 1,500 வாக்காளர்கள் இருப்பர். புதிதாக வாக்காளர் சேர்க்கப்படும் போது, அந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. "ஓட்டுச் சாவடிகளில், மின்சாரம், குடிநீர், கழிப்பறை வசதி இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்காக, படிக்கட்டு அருகே சாய்தளம் அமைக்க வேண்டும்' என, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. நிரந்தரமாக, சாய்தளம் அமைக்க முடியாத ஓட்டுச் சாவடிகளில், தற்காலிக சாய்தள வசதி ஏற்படுத்த வேண்டும். தேர்தலுக்காக, 70 ஆயிரம் கன்ட்ரோல் யூனிட்கள், 1.25 லட்சம் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. ஒரு தொகுதியில், அதிகபட்சமாக, 63 வேட்பாளர்கள் போட்டியிட்டால், நான்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த முடியும். அதற்கு மேல், வேட்பாளர்கள் போட்டியிட்டால், ஓட்டுச்சீட்டு பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். கூடுதல் ஓட்டுப்பதிவு இயந்திரம் தேவைப்பட்டால், கேரளா, கர்நாடகம் என, அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படும். தேர்தல் பணியில், 3 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களுக்கு, முதல் கட்ட பயிற்சி முடிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட பயிற்சி, வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டதும் நடத்தப்படும்.

ஒழுங்கு நடவடிக்கை : மூன்றாவது கட்ட பயிற்சி, ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாள் நடைபெறும். தேர்தல் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட ஊழியர், பணிக்கு வராமல் இருந்தால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அவர் மீது, குற்ற வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் விதிகள் உள்ளன. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.