Pages

Saturday, April 26, 2014

பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டல் மே 9 முதல் 14 வரை விண்ணப்பிக்கலாம்

"பிளஸ் 2 விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு, மே 9 முதல், 14 வரை விண்ணப்பிக்கலாம்,'' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் அறிவித்துள்ளார். கடந்த மார்ச்சில், பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதிய மாணவர்கள், எந்த பாடத்திற்கும், விடைத்தாள் நகல் கேட்டோ, மறுகூட்டல் கோரியோ விண்ணப்பிக்கலாம். பள்ளி மாணவர்கள், மே 9 முதல், 14 வரையிலான தேதிகளில், மாலை, 5:00 மணி வரை (ஞாயிறு தவிர), தாங்கள் படித்த பள்ளி மூலமாகவே விண்ணப்பிக்கலாம்; தனித் தேர்வு மாணவர்கள், தேர்வெழுதிய மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விடைத்தாள் நகல் கேட்கும் மாணவர், அதோடு கூடவே, மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கக் கூடாது; விடைத்தாள் நகல் பெற்ற பின், மறு மதிப்பீடு அல்லது, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.

கட்டணம் விவரம்: விடைத்தாள் நகல் பெற, மொழிப்பாடங்களுக்கு, 550 ரூபாயும், இதர பாடங்களுக்கு, தலா, 275 ரூபாயும் செலுத்த வேண்டும். இதை, சம்பந்தப்பட்ட பள்ளிகளில் செலுத்த வேண்டும்.
மறுகூட்டல் எனில், மொழிப்பாடங்கள் மற்றும் உயிரியல் பாடத்திற்கு, 305 ரூபாய்; இதர பாடங்களுக்கு, 205 ரூபாய் செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது, ஒப்புகை சீட்டு வழங்கப்படும். இதை, மாணவர்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இதில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தி தான், விடைத்தாள் நகல்களை, இணையதளம் வழியாக, பதிவிறக்கம் செய்யவும், மறுகூட்டல் முடிவுகளை அறியவும் முடியும். விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்யும் நாள், அதற்கான 
இணைய தள முகவரி, பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு, தேவராஜன் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.