Pages

Thursday, April 24, 2014

தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

தமிழகம், மகாராஷ்டிரா உள்பட 12 மாநிலங்கள், யூனியன்  பிரதேசங்களில் உள்ள 117 மக்களவை தொகுதிகளில் இன்று  வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543  மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 7ம் தேதி முதல் மே  12ம் தேதி வரையில் 9 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதுவரையில்  5 கட்டங்களாக மொத்தம் 311 மக்களவை தொகுதிகளில் தேர்தல்  முடிந்துள்ளது. 6வது கட்டமாக 117 மக்களவை தொகுதிகளில் இன்று  வாக்குப்பதிவு நடைபெறுகிறது.


மத்திய அமைச்சர்கள் சல்மான் குர்ஷித், மிலிந்த் தியோரா, நமோ  நாராயண் மீனா, ஜிதேந்திரா சிங், தாரிக் அன்வர் மற்றும் மக்களவை  எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், தேசிவாத காங்கிரஸ் மூத்த  தலைவர் சாகன் புஜ்பால், சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங்  யாதவ், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் அப்ஹிஜித் முகர்ஜி,  நடிகை ஹேமமாலினி, முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன்  ஆகியோர் இன்று நடைபெறும் தேர்தலில் களத்தில் உள்ளனர்.

6வது கட்டத் தேர்தலில் மொத்தம் 2,097 வேட்பாளர்கள் களத்தில்  உள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளிலும் ஒரே  கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. திமுக, அதிமுக, பாஜ., காங்கிரஸ்,  தேமுதிக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட  மொத்தம் 845 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். புதுச்சேரியில்  உள்ள ஒரே ஒரு மக்களவை தொகுதியில் மொத்தம் 30 வேட்பாளர்கள்  களத்தில் உள்ளனர். இவர்களின் தலைவிதியை தீர்மானிக்க 8 லட்சம்  வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
மகாராஷ்டிராவில் மொத்தம் 48 தொகுதிகள் உள்ளன. ஏற்கனவே  ஏப்ரல் 10ம் தேதி 10 தொகுதிகளிலும், ஏப்ரல் 17ம் தேதி 19  தொகுதிகளிலும் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது.  மூன்றாவது கட்டமாக மீதமுள்ள 19 தொகுதிகளில் இன்று  வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த 19 தொகுதிகளில் மொத்தம் 3.18  கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் 338  வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 80 தொகுதிகள் உள்ளன. இதில்,  ஏப்ரல் 10ம் தேதி 10 தொகுதிகளிலும் 17ம் தேதி 11 தொகுதிகளிலும்  தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த மாநிலத்தில் தேர்தல் மொத்தம் 6  கட்டங்களாக நடக்கிறது. இதில், மூன்றாவது கட்டமாக இன்று 12  தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மொத்தம் 188  வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களின் தலைவிதியை  மொத்தம் 1.98 கோடி வாக்காளர்கள் முடிவு செய்ய உள்ளனர். பா.ஜ.,  பகுஜன் சமாஜ் ஆகிய 2 கட்சிகளும் இந்த 12 தொகுதிகளிலும்  வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. ஆனால், காங்கிரஸ் கட்சி முலாயம்  சிங் மற்றும் அவரது மருமகள் டிம்பிள் ஆகியோர் போட்டியிடும்  தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.

மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் 29 தொகுதிகள் உள்ளன. ஏற்கனவே  ஏப்ரல் 10ம் தேதி 9 தொகுதிகளிலும் 17ம் தேதி 10 தொகுதிகளிலும்  தேர்தல் நடந்து முடிந்துவிட்டன. மீதமுள்ள 10 தொகுதிகளில் இன்று  வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மொத்தம் 118 வேட்பாளர்கள்  களத்தில் உள்ளனர். இவர்களின் தலைவிதியை 1.69 கோடி  வாக்காளர்கள் முடிவு செய்ய உள்ளனர். பீகாரில் மொத்தம் 40  தொகுதிகள் உள்ளன. ஏற்கனவே ஏப்ரல் 10ம் தேதி 6 தொகுதிகளிலும்,  17ம் தேதி 7 தொகுதிகளிலும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்று 7  தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மீதமுள்ள 20  தொகுதிகளில் ஏப்ரல் 30, மே 7, 12 ஆகிய தேதிகளில் தேர்தல்  நடைபெற உள்ளது. 

இன்று நடைபெறும் தேர்தலில் மொத்தம் 108 வேட்பாளர்கள் களத்தில்  உள்ளனர். மொத்தம் 1.04 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.  இந்த 7 தொகுதிகளும் பீகாரின் சீமான்சல் பகுதியில் வங்கதேசம்,  நேபாளம் ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளன.  அதனால், பாதுகாப்பு பணியில் துணை ராணுவத்தின ரும்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நக்சல் ஆதிக்கம் அதிகம் உள்ள சட்டீஸ்கர்  மாநிலத்தில் 7 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெற  உள்ளது. மொத்தம் 1.18 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.  மொத்தம் 153 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த மாநிலத்தில்  இன்றுடன் தேர்தல் முடிந்துவிடும். ஏற்கனவே 4 தொகுதிகளில்  தேர்தல் நடந்து முடிந்துவிட்டது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.