லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்ந்தெடுக்கப்பட உள்ள எம்.பி.,யிடம், அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பது குறித்து, புதுச்சேரி அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் லட்சுமணசாமி அளித்த சிறப்பு பேட்டி:
ஏழாவது ஊதியக் குழு அமைக்கப்பட உள்ள நிலையில், ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் தொடர்பான பல அரசாணைகள், புதுச்சேரி அரசால் அமலாக்கப்படாமல் உள்ளது.
குறிப்பாக, ஆசிரியர்களுக்கு எம்.ஏ.சி.பி., இதுவரை அமல்படுத்தப்படவில்லை. செவிலியர் மற்றும் ஏ.என்.எம்.,களுக்கு பணி கட்டமைப்பு மாற்றி அமைக்கப்படவில்லை.
அமைச்சக ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவு ஊழியர்களுக்கு, உயர்த்தப்பட்ட சம்பள விகிதம் வழங்க வேண்டும் என்ற பரிந்துரையை, பல மாநிலங்களில் அமல்படுத்தி விட்டன. ஆனால், புதுச்சேரியில் இதுவரை செயல்வடிவம் பெறவில்லை.
தினக்கூலி, பகுதிநேர, ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்துவிட்டு, இனி, குரூப் டி பணியிடங்களுக்கு 'அவுட் சோர்சிங்' செய்ய வேண்டும் என, பரிந்துரை செய்யப்பட்டது. இதன்படி, ஊழியர்களை பணிநிரந்தரம் செய்வில்லை. ஆனால், 'அவுட் சோர்சிங்' மட்டும் செய்கின்றனர்.
பத்து துறைகளில் உள்ள பல பதவிகளுக்கு ஆறாவது ஊதியக் கமிஷன் பரிந்துரைத்த ஊதிய விகிதத்தை இன்னும் அமல்படுத்தவில்லை.
நியமன விதிகள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படவில்லை. பணி கட்டமைப்பு சீரமைக்கப்படுவதில்லை. சீனியர்-ஜூனியர் ஊழியர்களுக்கு இடையிலான சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்படவில்லை.
அனைத்துக்கும் நிதி நெருக்கடியை காரணம் காட்டுகின்றனர். மாநில அந்தஸ்து வேண்டும் எனவும், சிறப்பு மாநில அந்தஸ்து வேண்டும் எனவும் கேட்கின்றனர். இரண்டில் எது வந்தாலும் சரி, ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை அமலாக்கப்படுமா என்பது கேள்விக்குறிதான். ஏனென்றால், அந்தளவுக்கு, புதுச்சேரி அரசு நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அரசின் வரி வருவாய் குறைந்து வருகிறது.
விவசாய நிலங்கள் நான்கில் ஒரு பங்காகவும், தொழிற்சாலைகள் பத்தில் ஒரு பங்காகவும் குறைந்து விட்டது. அரசு சார்பு நிறுவனங்களில் பணியாற்றும் ௬௦௦௦ ஊழியர்களுக்கு, மூன்று மாதத்தில் இருந்து, ௩௬ மாதங்கள்வரை, சம்பளம் வழங்கப்படவில்லை.
வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது, சம்பளம் வழங்காதது போன்றவற்றால், மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்து விட்டது.
இந்த பிரச்னைகளுக்குத் தீர்வு, நல்ல நிர்வாகம்தான். நல்ல நிர்வாகம் புதுச்சேரியில் நடந்திருந்தால், நிதி நெருக்கடியைச் சீரமைத்து இருக்கலாம்.
இதுபோன்ற சூழ்நிலையில், அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பது, தேர்ந்தெடுக்கப்பட உள்ள எம்.பி., புதுச்சேரியில் நல்ல நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மத்திய கூட்டமைப்பின் கருத்து.இவ்வாறு லட்சுமணசாமி கூறினார்.
-நமது நிருபர்-
No comments:
Post a Comment