Pages

Monday, March 31, 2014

தேர்தல் தினத்தன்று பொது விடுமுறை தனியாருக்கும் பொருந்தும்: அரசு உத்தரவு

மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு தினத்தன்று (ஏப். 24) பொது விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் சனிக்கிழமை வெளியிட்டார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் ஆலந்தூர் சட்டப் பேரவைக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வசதியாக அன்றைய தினம் அரசு விடுமுறை விடப்படுவதாக தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார். மத்திய அரசு சட்டப்படி சம்பளத்துடன் கூடிய இந்த விடுமுறை அறிவிக்கப்படுவதாக அவர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
தனியாருக்கும் பொருந்தும்: தமிழக அரசு அறிவித்துள்ள விடுமுறை அறிவிப்பு, தனியார் நிறுவனங்களும் பொருந்தும் என தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. தேர்தல் தினத்தன்று அனைத்து தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையை அளிக்க வேண்டும். இந்த விதியை பின்பற்றாத தனியார் நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத் துறை நடவடிக்கை எடுக்கும்.
என்ன நடவடிக்கை?: வாக்குப் பதிவு தினத்தன்று விடுமுறை விடாத தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு தொழிலாளர் நலத் துறை வசம் உள்ளது. விளக்கம் கோருவது மற்றும் அபராதம் விதிப்பது போன்ற சிறு அளவிலான தண்டனையே அவர்களுக்கு அளிக்கப்படுவதாக தொழிலாளர் நலத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த முறை வாக்குப் பதிவு, வேலை தினமான வியாழக்கிழமை வருவதால் விடுமுறை குறித்த அறிவிப்புகளை தனியார் நிறுவனங்கள் தனித்தனியாக வெளியிடும் என்றும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.