"பிளஸ் 2 தமிழ் முதல் தாளில், எதிர்பார்த்த வினாக்கள் இடம் பெற்றதால் எளிதாக இருந்தது" என மாணவர்கள், ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.
புதிய வகை விடைத்தாள் அறிமுகம் உட்பட பல மாற்றங்களுடன், பிளஸ் 2 பொதுத் தேர்வு, நேற்று துவங்கியது. தமிழ் முதல் தாள் குறித்து மதுரை மாணவர்கள், ஆசிரியர்கள் கூறியதாவது:
எம்.ஜெயலட்சுமி (மாணவி, கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி, மதுரை): எதிர்பார்த்த வினாக்கள் இடம் பெற்றன. ஒன்று மற்றும் இரண்டு மதிப்பெண் பகுதிகளில், பாடத்தின் பின் பகுதியில் இடம் பெற்ற வினாக்களே கேட்கப்பட்டன. மனப்பாடப் பகுதியில், திருக்குறள், கம்பராமாயணம் பகுதிகள் கேட்கப்பட்டன. இரண்டு பகுதியுமே பெரும்பாலான மாணவர்களுக்கு தெரிந்தவை. இலக்கணப் பகுதியும் எளிதாகவே இருந்தது.
டி.ஆர். லட்சுமி (மாணவி, கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி):"புளு பிரின்ட்" அடிப்படையில் தான் அனைத்து கேள்விகளும் இடம்பெற்றன. திருப்புதல் தேர்வு, பள்ளியில் நடந்த சிறப்பு தேர்வுக்கான வினாத்தாள்களில் இருந்து அதிக வினாக்கள் கேட்கப்பட்டன. எளிதாக இருந்ததால், விரைவாக தேர்வு எழுத முடிந்தது. திருப்பிப் பார்ப்பதற்கு அதிக நேரம் இருந்தது. முதல் தேர்வு எங்களுக்கு மகிழ்ச்சியாக அமைந்துள்ளது. அதிக மதிப்பெண் பெறுவேன்.
எ.கவிதா (தமிழாசிரியை, கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி, மதுரை):செய்யுள் மற்றும் இலக்கணப் பகுதிகளில் இருந்து "புளூ பிரின்ட்" அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டன. மறுமலர்ச்சி மற்றும் திருக்குறள் பகுதியில் இருந்து மனப்பாடம் பகுதி கேட்கப்பட்டதால், மாணவர்கள் எளிதாக எழுதினர். இலக்கணப் பகுதி யில், இலக்கணக் குறிப்பு, புணர்ச்சி, பகுபத உறுப்பிலக்கணம், திணை போன்ற எளிதான வினாக்கள் கேட்கப்பட்டன.
சாதாரண மாணவர்களும், இப்பகுதியில் 22 மதிப்பெண் உறுதியாக பெற முடியும். செய்யுள் பகுதியில், வாழ்த்து, தொகை நூல், சிற்றிலக்கியம், மறுமலர்ச்சி, வழிபாட்டுப் பாடல்கள் என, அனைத்துப் பகுதியிலும் சரிவிகிதத்தில் வினாக்கள் இடம் பெற்றன. கேள்விகள் மிகவும் எளிமையாக இருந்தன.
No comments:
Post a Comment