15 வயது பூர்த்தியாகவில்லை என்று கூறி மாணவரை, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத அனுமதி மறுப்பதாக தொடர்ந்த வழக்கில் அந்த மாணவரை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்
ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே உள்ள மரிச்சுக்கட்டி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-
எனது மகன் அறிவானந்தபாரதி, பார்த்திபனூரில் உள்ள தனியார் உயர்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி படித்து வருகிறான். வருகிற 26-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி தேர்வு தொடங்க உள்ளது. எனது மகனிடம் இருந்து மட்டும் தேர்வுக்கட்டணத்தை பள்ளி நிர்வாகம் பெற்றுக்கொள்ளவில்லை. காரணம் கேட்ட போது, 15 வயது பூர்த்தியானால் தான் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுத முடியும் என்றும், எனது மகனுக்கு 15 வயது பூர்த்தியாகவில்லை என்றும் தலைமை ஆசிரியர் கூறினார். இதனால், எனது மகன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனது மகனை தேர்வு எழுத அனுமதிக்காவிட்டால் ஒரு ஆண்டு வீணாகிவிடும். இதனால், அவனது எதிர்காலம் பாதிக்கும். எனவே, எனது மகனை எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுத அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
அனுமதிக்க வேண்டும்
இந்த மனு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் வெங்கிடசுப்பிரமணியன், ஷாபுஜோஸ் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்.
மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரரிடம் இருந்து பள்ளிக்கல்வித்துறை நிர்வாகம் கல்விக்கட்டணத்தை பெற்று மனுதாரரின் மகனை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.