Pages

Saturday, February 22, 2014

கல்விக்கடன் மறுப்பா? ரிசர்வ் வங்கிக்கு புகார் செய்யலாம்

"வங்கியில் வாங்கிய கல்விக்கடனுக்கு வட்டி கட்டாவிட்டால், தொடர்ந்து கடன் வழங்க மறுக்கும் வங்கிக் கிளைகள் மீது தலைமை அலுவலகத்தில் புகார் செய்யலாம். 30 நாட்களுக்குள் பதில் கிடைக்காவிட்டால் ரிசர்வ் வங்கியை அணுகலாம்" என சென்னை ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர் சதக்கத்துல்லா தெரிவித்தார்.

கல்லுாரிகளில் பயில்வதற்கு 4 லட்சம் ரூபாய் வரை கல்விக்கடன் பெறுவதற்கு சொத்துப் பிணையம் தேவையில்லை. வாங்கிய கடனுக்கான வட்டி மற்றும் அசலை படித்து முடித்த ஓராண்டில் அல்லது வேலை கிடைத்த ஆறாவது மாதத்தில் இருந்து செலுத்த வேண்டும். மாதா மாதம் வட்டி கட்ட வேண்டிய கட்டாயம் இல்லை. அதேபோல, முதல் தலைமுறையைச் சேர்ந்த தொழிற்கல்வி பயிலும் பட்டதாரிகளுக்கு, பெற்றோரின் ஆண்டு வருமானம் நான்கரை லட்ச ரூபாய்க்குள் இருந்தால் வட்டி மானியம் உண்டு.

இவை அனைத்தையும், ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல் படி அனைத்து வங்கிகளும் பின்பற்ற வேண்டும். ஆனால் சில வங்கிகளில், கல்விக்கடனை மாதந்தோறும் கட்டினால் தான், அடுத்த செமஸ்டருக்கான கல்விக்கடன் தர முன் வருகின்றனர். சில மேலாளர்கள், கடனில் குறிப்பிட்ட சதவீதத் தொகையை, வங்கியில் டெபாசிட் செய்யச் சொல்கின்றனர். இன்சூரன்ஸ் பிடிக்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர்.

முதல் தலைமுறை தொழிற்கல்வி பட்டதாரிகள் வட்டி கட்ட வேண்டியதில்லை என்றாலும், வட்டி கட்டினால் தான் கடன் தருவேன் என பிடிவாதம் செய்கின்றனர். இந்த வார்டில் உள்ளவர்களுக்கு, இந்த வங்கி என பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. வார்டு மாற்றி வந்ததாக குழப்பி கடன் அனுமதி தர, காலம் தாழ்த்துகின்றனர். இதனால் கல்விக்கடன் பெறுவதற்குள், பெற்றோர், மாணவர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி சென்னை மண்டல இயக்குனர் சதக்கத்துல்லா கூறுகையில், "கிளை மேலாளர்கள், வட்டி கட்ட வற்புறுத்தினாலோ, கடன்தர காலம் தாழ்த்தினாலோ அந்தந்த வங்கிகளின் தலைமை அலுவலக உயரதிகாரிக்கு புகார் செய்யலாம். இந்த புகாருக்கு 30 நாட்களுக்குள் அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், எங்களது குறை தீர்ப்பாளர் மையத்திற்கு புகார் தெரிவிக்கலாம்" என்றார்.

முகவரி: குறைதீர்ப்பாளர் மையம், ரிசர்வ் வங்கி, ராஜாஜி தெரு, போர்ட் கிளேசியஸ், சென்னை.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.