Pages

Tuesday, February 4, 2014

மாணவிகளின் விளையாட்டு ஆர்வம் கனவு : மைதானம் பல ஆண்டுகளாக வீணாகிறது

கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் விளையாட்டு ஆர்வமும், திறமையும் பல ஆண்டுகளாக முடங்கி போய் உள்ளது. விளையாட்டு மைதானம் இருந்தும் அதிகாரிகளின் மெத்தனபோக்கால் மைதானம் பயன்பாடியின்றி அவல நிலையில்
கிடக்கிறது. கள்ளக்குறிச்சியில் அரசு ஆண்கள் பள்ளியும், பெண்கள் பள்ளியும் கடந்த 1968ம் ஆண்டு வரை ஒரே வளாகத்தில் (தற்போதைய பெண்கள் பள்ளி வளாகம்) தனியாக இயங்கி வந்தது. பின்னர் அரசு ஆண்கள் பள்ளிக்கு நேபால் தெருவில் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு அருகில் தானமாக இடம் வழங்கப்பட்டது.
இதற்கிடையே அரசு ஆண்கள் பள்ளிக்கு உட்கட்டமைப்பு மற்றும் விளையாட்டு மைதானம் கச்சிராய பாளையம் சாலையில் ஒதுக்கப்பட்டது. பெண்கள் பள்ளி அதே இடத்தில் இயங்கி வருகிறது. நகர மற்றும் சுற்று பகுதிகளைச் சேர்ந்த கிராமப்புற மாணவிகள் படித்த பள்ளிக்கு விளையாட்டு மைதானம் இல்லாமல் இருந்தது. மாணவிகளின் விளையாட்டு திறமைகளை வெளிப்படுத்த ஆண்கள் பள்ளிக்கு தானமாக வழங்கிய இடத்தை பெறுவதில் இரு பள்ளிகளுக்கு இடையே 15 ஆண்டுகளாக பனிப் போர் நிலவி வந்தது. ஊர் பிரமுகர்கள் எடுத்த முயற்சியால் அப்போதைய சி.இ.ஓ., கண்ணப்பன் நடவடிக்கை எடுத்தார். அரசு ஆண்கள் பள்ளிக்கு தானமாக வழங்கிய இடம் பெண்கள் பள்ளி விளையாட்டு மைதானத்திற்கு என ஒதுக்கப்பட்டது. போராடி பெறப்பட்டதே தவிர ஆனால் விளையாட்டு மைதானமாக பயன்படுத்த வில்லை. ஏக்கம்தற்போது 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2,000க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். விளையாட்டு துறைக்கு தமிழக அரசு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பள்ளி மாணவ மாணவிகளின் விளையாட்டு ஆர்வத்தினை ஊக்குவித்து வருகிறது .
ஆனால் கள்ளக்குறிச்சி மாணவிகளிடையே விளையாட்டு கனவாக மட்டுமே இருந்து வருகிறது. பள்ளி அளவில் நடக்கும் போட்டிகளில் கண்டிப்பாக மாணவிகள் பங்குபெற வேண்டும் சூழ்நிலையில் செல்லும்போது போதிய பயிற்சியின்றி பரிசுகள் பெறமுடியவில்லை.
கவலை மாணவிகளின் விளையாட்டு ஆர்வம், தனித் திறமை முடங்கி கிடப்பதை கண்டு பெற்றோர்களும் கவலயைடைந்துள்ளனர். கல்வி அறிவோடு, விளையாட்டும் மிக அவசியம் என்பதை உணர்ந்து உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆனால் கள்ளக்குறிச்சி பெண்கள் பள்ளியில் விளையாட்டு பயிற்சிகள் உரிய அளவில் அளிப்பதில்லை.
அனைத்து விளையாட்டிற்கும் பயிற்சி அளிக்கும் வகையில் விஸ்தாரமாக இட வசதிகள் இருந்தும் பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் புதர்கள் மண்டி, அப்பகுதி மக்களின் கழிப்பிடமாகவும், பன்றிகளின் சங்கமமாகவே விளங்கி வருகிறது.அரசு பள்ளி மாணவிகளின் விளையாட்டு ஆர்வம் மற்றும் திறமையை வெளியே கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.