எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு தொடங்கும் நேர மாற்றத்தைக் கைவிட வேண்டும் என்று, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
அந்தச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் அதன் மாநிலப் பொதுச் செயலர் தி.கோவிந்தன் தலைமையில் சேலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கோவிந்தன் கூறியது:
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த, சமூக நீதிக்குக் கேடு விளைவிக்கும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் மேல்நிலைக் கல்வி தொடங்குவதற்கு முன்னரே பட்டதாரி ஆசிரியர்களுக்கும், உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் உருவாக்கப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களை மற்றவர்களுக்கு பங்கிட்டு வழங்குவதைக் கைவிட வேண்டும்.
எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வுகள் காலை 9.15 மணிக்குத் தொடங்கும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால், ஆசிரியர்கள், மாணவர்களின் நலன் கருதி, ஏற்கெனவே இருந்தபடி காலை 10 மணிக்கே தேர்வுகளைத் தொடங்க வேண்டும்.
அரசுப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்காக நடத்தப்படும் தகுதித் தேர்வு முறையைக் கைவிட வேண்டும். இலவசக் கட்டாயக் கல்வி விதிகள் தனியார் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிக்க பிரதிநிதிகள் குழுவை அமைக்க வேண்டும். விதிகளை மீறும் கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்ற எங்களது 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலத்தில் பிப்ரவரி 13-ஆம் தேதி கோரிக்கை முழக்க, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.