Pages

Saturday, February 22, 2014

ஊழியர்களின் ஓய்வூதிய நிதியை பரஸ்பர நிதியில் முதலீடு செய்ய வேண்டும்: செபி

இளம் பணியாளர்களின் ஓய்வூதிய நிதியை பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) கேட்டுக் கொண்டுள்ளது. தனி நபர் சேமிப்புகளை பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் செபி தெரிவித்துள்ளது.

பணியாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின்கீழ் பயன்பெறும் பணியாளர்களில் 40-45 வயது வரையுள்ள பணியாளர்களின் ஓய்வூதிய நிதி மற்றும் அதிக வருவாய் ஈட்டும் தனி நபரின் நிதியை பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் செபி கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியாவில் பரஸ்பர நிதி திட்டங்களுக்கு நெறியாளர்களாக விளங்கும் செபி இத்தகைய யோசனையைத் தெரிவித்துள்ளது. தற்போது பரஸ்பர நிதித் திட்டங்களிலான முதலீடு ரூ.9 லட்சம் கோடியாக உள்ளது. இது அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

பரஸ்பர நிதி திட்டத்தை சீரமைக்க நீண்ட கால திட்டத்தை அமல்படுத்த எண்ணியுள்ள செபி, பணியாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் உள்ள நிதியை பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்ய மத்திய அரசு வலியுறுத்தவும் எண்ணியுள்ளது.

பரஸ்பர நிதித் திட்டத்துக்கான புதிய கொள்கைக்கு செபி ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அது விரைவில் செயல்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈ.பி.எப்.ஓ. எனப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதியில் 15 சதவிகிதத்தை (கார்பஸ் பண்ட்) பங்கு சார்ந்த பரஸ்பர நிதித் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு மத்திய நிதியமைச்சகம் 2008-ல் அனுமதியளித்தது. ஆனால், தற்போது அந் நிதியானது பங்கு சார்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்யப்படவில்லை.

மேலும், தொழிலாளர் நல அமைச்சகமும் பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு கடந்த ஆண்டு அனுமதி மறுத்தது.

இந் நிலையில், மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தின் சுற்றறிக்கையில் மாற்றம் செய்து, ஈ.பி.எப்.ஓ. நிதியில் 15 சதவிகிதத்தை பங்கு மற்றும் பங்கு சார்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என செபி கேட்டுக் கொண்டுள்ளது.

தற்போது மாதந்தோறும் ரூ.6,500 ஊதியம் பெறும் பணியாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் உறுப்பினராகிறார். இந் நிலையில், உறுப்பினரின் விருப்பத்துக்கேற்ப நிதி திட்டங்களில் முதலீடு செய்யலாம் என செபி பரிந்துரைக்கிறது.

மேலும், வருங்கால வைப்பு நிதி அமைப்பும் குறிப்பிட்ட நிதித் திட்டங்களைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம். அதுபோல, 25-40 அல்லது 25-45 வயதுள்ள பணியாளர்களின் நிதியை முதலீடு செய்யலாம். மேலும், பணியாளர் வழங்கும் தொகையில் 20-25 சதவிகிதத்தை இத் திட்டங்களில் முதலீடு செய்யலாம் எனவும் செபி பரிந்துரைத்துள்ளது. அமெரிக்காவில் இத்தகைய முறை பின்பற்றப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.

ஈ.பி.எப்.ஓ.வில் ரூ.5.5 லட்சம் கோடி நிதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.