Pages

Sunday, February 23, 2014

"ஆன்-லைன்' குளறுபடியை தவிர்க்க, தேர்வுத்துறை அமைத்த சிறப்பு மையங்கள்

தேர்வுகளுக்காக, மாணவ, மாணவியர், தனியார், "பிரவுசிங்' மையங்களில் பதிவு செய்யும் போது ஏற்படும் குளறுபடிகளை தவிர்க்க, முதல் முறையாக, தேர்வுத்துறை, 32 மாவட்டங்களிலும், சிறப்பு மையங்களை அமைத்து எடுத்த நடவடிக்கை, மாணவர் மத்தியில், வரவேற்பை பெற்று உள்ளது. அதே நேரத்தில், "வருமானம் போய்விட்டதே' என, "பிரவுசிங்' மையங்கள் புலம்புகின்றன.

தேர்வுத்துறை நடத்தும் பல்வேறு தேர்வுகளில் பங்கேற்க, "ஆன்-லைன்' முறையில், பதிவு செய்ய வேண்டி உள்ளது. இதற்காக, மாணவ, மாணவியர், "பிரவுசிங்' மையங்களில் குவிகின்றனர்.
பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவது, புகைப்படத்தை, "ஸ்கேன்' செய்து, பதிவேற்றம் செய்தல் போன்ற பணிகளை, இணைய தள மைய பணியாளர்கள் செய்கின்றனர். இதற்காக, 200 ரூபாய் முதல், பலவாறாக கட்டணம் வசூலிக்கின்றனர். இந்நிலையில், பிளஸ் 2, "தட்கல்' திட்டத்திற்காக, தேர்வுத்துறை, புதிய நடவடிக்கை எடுத்தது. "தனியார் மையங்களில், பதிவு செய்யக்கூடாது. தேர்வுத்துறை அமைத்துள்ள சிறப்பு மையங்கள் மூலமாக மட்டுமே, பதிவு செய்ய வேண்டும்' என, தேர்வுத்துறை அறிவித்தது.
அதன்படி, 32 மாவட்டங்களிலும், தேர்வுத்துறையே, சிறப்பு மையங்களை அமைத்து, 50 ரூபாய் கட்டணத்தில், மாணவரின் விவரங்களை பதிவு செய்ய, நடடிக்கை எடுத்தது. இதனால், தனியார் இணையதள மையங்கள் வெறிச்சோடின.

இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் கூறியதாவது: பணத்தை வசூலிப்பது மட்டுமே, பிரவுசிங் சென்டர் களின் குறியாக உள்ளது. மாணவரின் விவரங்களை, சரியான முறையில் பதிவு செய்ய வேண்டும் என்பதில், அக்கறை இல்லை. பிறந்த தேதியை மாற்றி பதிவது, புகைப்படத்தை, சரியான முறையில், "ஸ்கேன்' செய்யாதது, முகவரியை பதிவு செய்வதில் தவறு என, பல குழப்பங்களை செய்கின்றனர்.
இதனால், மாணவர் பாதிக்கப்படுகின்றனர். இதை தவிர்க்கவே, நேரடியாக, நாங்களே, சிறப்பு மையங்களை அமைத்தோம். இதன்மூலம், மாணவர் விவரங்கள், சரியாக பதிவு செய்வது உறுதிப்படுத்தியது உடன், மாணவர்களுக்கான செலவு, 50 ரூபாயில் முடிந்து விடுகிறது. இவ்வாறு, இயக்குனர் தெரிவித்தார்.
தேர்வுத்துறையின் அதிகாரப்பூர்வ மையங்களில், பதிவு நடப்பதும், அதற்காக, குறைந்த கட்டணம் வசூலிப்பதும், மாணவர் மத்தியில், வரவேற்பை பெற்றுள்ளது. இனி, வரும் தேர்வுகளிலும், இதேபோன்று, சிறப்பு மையங்கள் அமைக்கவும், தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.