Pages

Saturday, February 15, 2014

மோடியால் சம்பளதாரர்களுக்கு சலுகை கிடைக்குமா?

பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி தன் பிரசாரத்தின் போது, தான் பிரதமராக்கப்பட்டால் செய்யப் போகும் காரியங்கள் என, நிறைய திட்டங்களை முன் வைத்துப் பேசுகிறார். அவர், சமீபத்தில் பொதுமக்களுடன் நடத்திய, வீடியோ கான்பரன்ஸ் உரையாடல் பிரசாரத்தில், 'நான் பிரதமரானால், கட்டாயம் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும்,
கறுப்பு பணத்தை மீட்பேன். அப்படி மீட்டு கொண்டு வரப்படும் பணமே, பல ஆயிரம் கோடிகள் இருக்கும் என்பதால், நாட்டில் சரியான முறையில், வருமான வரி செலுத்திக் கொண்டிருக்கும், மாத சம்பளதாரர்களுக்கு, வருமான வரி பிடித்தத்தில், 5 முதல் 10 சதவீத அளவுக்கு, சிறப்பு சலுகை அளிக்கப்படும்' என, தெரிவித்தார். இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவருமா என்பது குறித்து, பிரபலங்கள் பகிர்ந்து கொண்ட மாறுபட்ட கருத்துக்கள் இங்கே:

இந்தியாவில், வரி கட்டாமல் ஏமாற்றி சேமித்த கறுப்புப் பணம், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ளது. இதன் அளவு, 400 லட்சம் கோடி ரூபாய், 500 லட்சம் கோடி ரூபாய் என, ஆள் ஆளுக்கு, ஒரு புள்ளி விவரத்தை தெரிவிக்கின்றனர். வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள, கறுப்புப் பணத்தின் உண்மையான மதிப்பு இன்னும் தெரியவில்லை. ஆனால், மிகப்பெரிய அளவிலான இந்திய பணம், வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ளது என்பது உண்மை. இப்பணத்தை, இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வருவதால், வரியில்லாத பட்ஜெட்டை அளிக்க முடியும். நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியும். நதிநீர் இணைப்பு திட்டத்தையே செயல்படுத்த முடியும் என, உறுதி அளிக்கின்றனர். அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் போது, தொழில் பெருகும், வேலைவாய்ப்பு அதிகரிக்கும், ஊதியம் பெருகும். அடிப்படை ஊதியத்தை, 10 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிறைவேற்ற முடியும். எனவே, கறுப்புப் பணத்தை, நாட்டிற்கு திரும்பக் கொண்டு வந்தால், 'வரி செலுத்தும் அரசு ஊழியர்களுக்கு, 10 சதவீத அளவுக்கு சலுகை அளிக்கப்படும்' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி கூறுவதை, அனைத்துத் தரப்பினரும் வரவேற்க வேண்டும். நாட்டின் தேவைக்காக வட்டிக்கு வெளிநாட்டில் கடன் வாங்குகிறோம். கறுப்பு பணத்தை மீட்டால், கடன் வாங்க வேண்டிய அவசியமிருக்காது. ஒருபுறம் ஊதியம் அதிகரிக்கிறது. அதே நேரத்தில், விலைவாசி யும் உயருகிறது. எனவே, ஊதியம் எவ்வளவு அதிகரித்தாலும், அதனால் பயனில்லாமல் ஊழியர்கள் தவிக்கின்றனர். இதை சரிசெய்ய, கறுப்புப் பணத்தை நாட்டுக்கு கொண்டு வரவேண்டியது அவசியமானது. மோடி அறிவித்துள்ள சலுகையை, அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல், தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் அளிக்க வேண்டும்.


துரைராஜ், தேசிய செயலர், பாரதிய மஸ்தூர் சபா


கறுப்புப் பணத்தை மீட்பதற்கும், வருமான வரியில் சலுகை அளிப்பதற்கும் தொடர்பில்லை. வருமான வரி சட்டம், வரி செலுத்துவதற்கான ஊதிய உச்ச வரம்பை அறிவித்துள்ளது. அதன்படி, வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது. வேண்டுமனால், வருமான வரி செலுத்த வேண்டிய உச்ச வரம்பை அதிகரிக்கலாம். வரி சலுகை அளிக்கும் மோடியின் அறிவிப்பும், அக்கட்சியின் முன்னாள் தலைவர், நிதின் கட்காரி தலைமையிலான பொருளாதாரக் குழுவின் அறிவிப்பும், முரண்படுகின்றன. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், வரி செலுத்தும் முறை ரத்து செய்யப்படும். அனைத்து பண பரிவர்த்தனையும், வங்கி மூலம் செய்யப்படும். அதற்கு, இரண்டு சதவீத கட்டணம் வசூலிக்கப்படும் என, பா.ஜ., பொருளாதாரக் குழு சொல்கிறது. கட்காரி குழுவின் அறிவிப்புப் படி, ஏழை, பணக்காரன் அனைவரும், வங்கி மூலம் மட்டுமே பொருள்கள் வாங்குவது முதற்கொண்டு, அனைத்து நடவடிக்கைகளையும் செய்ய வேண்டும். அனைவரும், இரண்டு சதவீத கட்டணம் செலுத்த வேண்டும். அதனால், தற்போது ஏழைகளுக்கு வரி செலுத்துவதிலிருந்து அளிக்கப்படும் விலக்கு, ரத்து செய்யப்படும். இந்நிலையில், அரசு ஊழியர்களுக்கு மோடி அறிவித்துள்ள வரி சலுகை அறிவிப்பு முரண்படுகிறது. இந்த அறிவிப்பு கவர்ச்சிகரமாக ஓட்டு வாங்குவதற்கு முன்னிறுத்தும் வாக்குறுதி. உண்மையிலேயே, அரசு ஊழியர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என, மோடி விரும்பினால், தற்போது அமல்படுத்தியுள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தை, ரத்து செய்து, ஏற்கனவே அமலில் இருந்த ஓய்வூதிய திட்டத்தை அமல்செய்வோம் என, அறிவிப்பாரா? காங்கிரசுக்கும், பா.ஜ.,வுக்கும் பொருளாதார கொள்கையில் எந்த மாறுதலும் இல்லை. உள்நாட்டில் உள்ள, 3.15 லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை வெளிக்கொணர விரும்பாதவர்கள், வெளிநாட்டில் பதுக்கப்பட்ட கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவோம், அதன்மூலம், அரசு ஊழியர்களுக்கு சலுகை அளிப்போம் என்பதை நம்ப முடியவில்லை.
துரைபாண்டியன், பொதுச் செயலர், மத்திய அரசு ஊழியர் சம்மேளனம்

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.