Pages

Monday, February 24, 2014

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு: "ஐகோர்ட்டின் இறுதித்தீர்ப்பை பொறுத்தே இருக்கும்" நீதிபதி அறிவிப்பு

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு ஐகோர்ட்டின் இறுதித் தீர்ப்பை பொறுத்தே இருக்கும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை அருகே உள்ள ராயனூரை சேர்ந்தவர் ஸ்ரீசாய்பிரியா. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:

நான், 1992–ம் ஆண்டு இடைநிலை ஆசிரியை பயிற்சி முடித்தேன். 1995–ம் ஆண்டு பி.காம் பட்டம் பெற்றேன். இந்த நிலையில் 1997–ம் ஆண்டு இடைநிலை ஆசிரியை பணி கிடைத்தது. இதன்பின்பு, தொலைநிலைக்கல்வி மூலம் எம்.காம், எம்.பில்(வணிகவியல்), பி.ஏ(ஆங்கிலம்), பி.எட் ஆகிய படிப்புகளை முடித்தேன். பி.ஏ ஆங்கிலம் பி.எட் படித்து இருந்ததால் பட்டதாரி ஆசிரியையாக 2009–ம் ஆண்டு பதவி உயர்வு பெற்றேன். தற்போது குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வருகிறேன்.
நியாயமற்றது
18.10.2000 அன்று முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஒரு உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவில், தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வணிகவியல் ஆகிய பட்டப்படிப்பில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவை எடுத்து படித்தவர்கள் பட்ட மேற்படிப்பில் இன்னொரு பாடப்பிரிவை எடுத்து இருந்தால் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் அவர்களுக்கு 3 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டால் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பில் ஒரே பாடப்பிரிவை எடுத்து படித்தவர்களுக்கு ஒரு பணியிடம் ஒதுக்கப்படும்(3:1) என்று கூறப்பட்டுள்ளது.
பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு ஆகியவற்றில் ஒரே பாடத்தை எடுத்து படித்தவர்களுக்குத்தான் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். ஆனால், பட்டப்படிப்பில் ஒரு பாடத்தையும், பட்ட மேற்படிப்பில் இன்னொரு பாடத்தையும் எடுத்து படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது நியாயமற்றது.
ரத்து செய்ய வேண்டும்
பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு ஆகியவற்றில் ஒரே பாடத்திட்டத்தை எடுத்து படித்தவர்களால் தான் மாணவர்களுக்கு அந்த பாடத்தில் நல்ல முறையில் கல்வி கற்று கொடுக்க முடியும். நான், பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு ஆகியவற்றில் வணிகவியல் பாடத்தை எடுத்து படித்து இருந்த போதிலும் அரசின் முரண்பாடான உத்தரவால் எனக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை.
என்னை போன்று பலர் இந்த உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு தொடர்பாக 18.10.2000 அன்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு ஆகியவற்றில் ஒரே பாடத்தை எடுத்து படித்தவர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் முன்னுரிமை வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இறுதி தீர்ப்பே முடிவு
இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் சண்முகராஜாசேதுபதி ஆஜராகி வாதாடினார்.
மனுவை விசாரித்த நீதிபதி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை பொறுத்தே இருக்கும் என்று உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு சம்பந்தமாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.