பத்தாம் வகுப்பு மாணவர்களைத் தேர்ச்சி அடைய வைப்பது தொடர்பாக 5 ஆயிரம் அரசுப் பள்ளிகளுக்கு கையேடுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. ஆசிரியர்களுக்கு வழிகாட்டும் வகையிலான இந்தக் கையேட்டை அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இயக்ககம் தயாரித்துள்ளது.
இந்தக் கையேட்டில், தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களை மையப்படுத்தி பல்வேறு குறிப்புகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், சிரமப்படும் மாணவர்கள் தேர்ச்சி பெறவும், சுமாராகப் படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்க வைக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, துறைச் செயலாளர் டி.சபிதா ஆகியோர் மண்டல வாரியாக அண்மையில் ஆய்வு நடத்தினர்.
அப்போது, நாகப்பட்டினம் மாவட்ட ஆசிரியர்களின் கற்பித்தல் முறைகள் சிறப்பாக இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த ஆசிரியர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரிகளைக் கொண்டு இந்தக் கையேட்டை தயாரிக்க அவர்கள் உத்தரவிட்டனர்.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இயக்ககம் சார்பில் மொத்தம் 50 ஆயிரம் கையேடுகள் அச்சடிக்கப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் முக்கியப் பகுதிகளும், அவற்றை நடத்த வேண்டிய முறைகளும் இதில் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இணைப்புப் பயிற்சி: ஒன்பதாம் வகுப்பில் பயிலும் 1.68 லட்சம் மாணவர்களுக்கு அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில் இணைப்புப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
கற்பதில் சிரமப்படும் இந்த மாணவர்களை, பிற மாணவர்களுக்கு இணையாகத் தயார் செய்வதற்காக இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்த மாணவர்களுக்கு வாசிப்புத் திறன், எழுதும் திறன், கணிதத் திறனில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தப் பயிற்சிகள் நவம்பர் இறுதியில் தொடங்கப்பட்டன. பிப்ரவரி மாதம் வரை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.