Pages

Thursday, January 23, 2014

சர்வதேச அறிவியல் கண்காட்சி: வத்திராயிருப்பு மாணவர் தேர்வு

அமெரிக்காவில் நடைபெற உள்ள சர்வதேச அறிவியல் கண்காட்சியில், இந்தியா சார்பில் கண்டுபிடிப்புகளை சமர்ப்பிக்க, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பை சேர்ந்த பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பள்ளி மாணவர்களிடயே, அறிவியல் கண்டுபிடிப்பு மனப்பான்மையை, ஊக்குவிக்கும் நோக்கில், இந்திய அறிவியல் சங்கம், ஆண்டு தோறும்,
அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்த போட்டியை நடத்தி வருகிறது. சிறந்த கண்டுபிடிப்புகளை தேர்வு செய்து, விருது , பதக்கங்களை வழங்கி வருகிறது. முதல் மூன்று வெற்றியாளர்களை, சர்வதேச போட்டிகளுக்கு, இந்திய நாட்டின் பிரதிநிதியாக அனுப்பி வைக்கிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான தேர்வு, கடந்த ஆறு மாதமாக, இந்தியா முழுவதும் நடந்தது. தமிழகத்திலிருந்து மட்டும் 4 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டு, கண்டுபிடிப்புகளை சமர்ப்பித்தனர். இறுதித் தேர்வில், அகில இந்திய அளவில் 30 பேர் தேர்வானர். அவர்களுக்கு ஜன., 11ல் சென்னையில் போட்டிகள் நடந்தது. இதில், விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவன் மா.டெனித் ஆதித்யா, தேசிய அளவில் முதலிடம் பெற்று, தங்கப்பதக்கம், கோப்பையை வென்றார். இவர், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும், பிளாஸ்டிக் கப், பிளேட், பாலிதீன் பைகள் போன்றவற்றிலிருந்து, பூமி மாசுபடுவதை தடுக்கும் நோக்கில், வாழை இலையை இயற்கை முறையில் பதப்படுத்தி, அதன் மூலம் பிளேட், கப், ஆபீஸ்கவர், மாத்திரைகவர் உட்பட பல்வேறு பொருட்களை தயார் செய்து, அதை, மூன்று ஆண்டு வரை பயன்படுத்தும் தொழில் நுட்பத்தை கண்டுபிடித்து, சமர்ப்பித்திருந்தார். இவர், இவ்விருதை பெற்றதன் மூலம், அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற உள்ள சர்வதேச அறிவியல் கண்டுபிடிப்பு கண்காட்சியில், இந்தியாவிற்கான கண்டு பிடிப்பை சமர்ப்பிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.